2015-04-15 17:11:00

கர்தினால் Roberto Tucci மறைவு – திருத்தந்தையின் தந்தி


ஏப்.15,2015. ஏப்ரல் 14, இச்செவ்வாய் இரவு, இறைவனடி சேர்ந்த கர்தினால் ரொபெர்த்தோ துச்சி (Roberto Tucci) அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபை உலகத் தலைவர், அருள்பணி Adolfo Nicolas அவர்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்போது, சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றியது உட்பட, பல ஆண்டுகளாக திருப்பீடத்திற்காக பல வழிகளில் உழைத்தவர், கர்தினால் துச்சி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித இஞ்ஞாசியாரைப் பின்பற்றி, திருஅவையின் தேவைகள் உள்ள இடங்களில் தன் பணிகளைத் தொடர்ந்து அர்ப்பணித்தவர், கர்தினால் துச்சி என்று திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

கர்தினால் துச்சி அவர்களின் மறைவையொட்டி, இயேசு சபையினர் கொண்டிருக்கும் ஆழ்ந்தத் துயரத்தில் தன்னையே இணைப்பதாகக்கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபத் தந்தியை நிறைவு செய்துள்ளார்.

ஏப்ரல் 19, அடுத்த ஞாயிறன்று தன் 94வது வயதை நிறைவு செய்யவிருந்த கர்தினால் துச்சி அவர்கள், 1973ம் ஆண்டு முதல், 1985ம் ஆண்டு முடிய வத்திக்கான் வானொலியின் இயக்குனராகப் பணியாற்றினார்.

கர்தினால் ரொபெர்த்தோ துச்சி (Roberto Tucci) அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 224ஆகக் குறைந்துள்ளது. இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடைய கர்தினால்கள், 122 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.