2015-04-15 17:27:00

ஏப்ரல் முதல் ஜூன் முடிய திருத்தந்தை பங்கேற்கும் நிகழ்வுகள்


ஏப்.15,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளின் விவரங்களை, திருத்தந்தையின் நிகழ்வுகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றும் அருள்பணி குயிதோ மரினி (Guido Marini) அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நல்லாயன் ஞாயிறென்றும், இறையழைத்தல் ஞாயிறென்றும் கொண்டாடப்படும் ஏப்ரல் 26ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராயலத்தில் அருள் பணியாளர்களைத் திருநிலைப்படுத்தும் திருப்பலியை நிகழ்த்துவார்.

மேமாதம் 3ம் தேதி, ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் ஓஸ்தியா எனுமிடத்தில் உள்ள "அமைதியின் அரசியாம் அன்னை மரியா" பங்குக் கோவிலுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, மே மாதம் 12, செவ்வாய்க்கிழமை, அகில உலக காரித்தாஸ் பொது அவையில் கலந்துகொள்ள வரும் அங்கத்தினருக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராயலத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.

முத்திப்பேறு பெற்றவர்களான Jeanne-Emilie de Villeneuve; Maria Cristina of the Immaculate Conception Brando; Marie-Alphonsine Danil Ghattas; Marie of Jesus Crucified Baouardy ஆகியோரை, புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை, மே மாதம் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்துவார்.

ஜூன் மாதம் 4ம் தேதி, வியாழனன்று கொண்டாடப்படும் இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தியபின், அங்கிருந்து புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்கு ஊர்வலமாகச் சென்று அங்கு நற்கருணை ஆசீர் வழங்குகிறார்.

ஜூன் 6ம் தேதி, போஸ்னியாவின் தலைநகர் சரயேவோவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, ஜூன் 21, 22 ஆகிய நாட்களில் இத்தாலியின் தூரின் நகருக்கு மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29ம் தேதி, திங்களன்று கொண்டாடப்படும் திருத்தூதர் பேதுரு, பவுல் பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காவில் நிகழ்த்தும் திருப்பலியில், பேராயர்கள் அணியும் 'பாலியம்' என்ற கழுத்தப் பட்டைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சிக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.