2015-04-14 15:14:00

திருத்தந்தை-விடுதலைப் பயணம், இறையழைத்தலின் அடிப்படை அனுபவம்


ஏப்.14,2015. விடுதலைப் பயண அனுபவம், கிறிஸ்தவ வாழ்வின், குறிப்பாக, நற்செய்திக்கு சிறப்பாகத் தங்களை அர்ப்பணித்தவர்களின் அனுபவம், இது, அகவாழ்வின் மாற்றத்திற்கும், மனமாற்றத்திற்கும் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“விடுதலைப் பயணம், இறையழைத்தலின் அடிப்படை அனுபவம்” என்ற தலைப்பில், இம்மாதம் 26ம் தேதி சிறப்பிக்கப்படும் 52வது உலக இறையழைத்தல் தினத்திற்கென வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

திருஅவையின் மறைப்பணி மற்றும் நற்செய்தி அறிவிப்புப்பணி பற்றி இச்செய்தியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை தன்னைப் பற்றியும், தனது அமைப்புமுறைகள், தனது வெற்றிகள் பற்றியும் குறைவாகக் கவலைப்பட்டு, இறைவனின் பிள்ளைகள் வாழும் இடங்கள் எல்லாம் சென்று அவர்களைச் சந்தித்து அவர்களின் துன்பங்களிலும் வேதனைகளிலும் பங்குகொள்வதற்கு அழைக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

கடவுளையும் பிறரையும் நோக்கிய விடுதலைப் பயணம், நம் வாழ்வை மகிழ்வு மற்றும் அர்த்தமுள்ளதாக நிரப்புகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, வருங்காலத்துக்கு திறந்த இதயத்தையும் மனத்தாராளத்தையும் வழங்கும் இளமையையும், திறந்தமனத்தையும் கொண்டிருக்கும் இளையோருக்கு இச்செய்தியை சிறப்பாகச் சொல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை வருங்காலம் பற்றிய கனவுகளையும், ஆவலையும் கவலையடையச் செய்தாலும், தங்களைவிட்டு வெளிவந்து விடுதலைப் பயணத்தை மேற்கொள்ள அஞ்சவேண்டாமென்று இளையோரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை.

இயேசுவின் அடிச்சுவடுகளின் வழி சென்று, அவரின் வார்த்தைகளை ஏற்று  இறைவனின் அழைப்பால் தங்களை வியப்படையச் செய்வது எவ்வளவு மகத்தானது என்றும், இவ்வாறு வாழும்போது இளையோரின் வாழ்வு ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் மகிழ்வானதாகவும், வளமையானதாகவும் அமையும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ அழைப்பில் முதலும் முக்கியமுமாக இருப்பது அன்புகூர விடுக்கப்படும் அழைப்பாகும், இவ்வன்பு, தன்னையே வழங்குதல் மூலம் விடுதலைப் பயணத்தைத்  தொடர்ந்து மேற்கொண்டு தன்னையும் கடவுளையும் கண்டுணர உதவும் என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.