2015-04-13 15:31:00

“இரக்கத்தின் திருமுகம்”ஆணை அறிக்கையின் சுருக்கம்


ஏப்.11,2015. “Misericordiae Vultus”- “இரக்கத்தின் திருமுகம்” என்ற தலைப்பில் இரக்கத்தின் புனித ஆண்டை அறிவிக்கும், ஆணை அறிக்கையை (Bull of Indiction) ஏப்ரல் 11, கடந்த சனிக்கிழமை மாலை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வருகிற டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, முந்தைய ஜூபிலி ஆண்டுகள் போல் உரோம் நகரில் மட்டும் சிறப்பிக்கப்படாமல், உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும், மக்கள் பெருமளவாகச் செல்லும் திருத்தலங்களிலும் சிறப்பிக்கப்படுகின்றது. அதன்மூலம் மக்கள் இறையருளால் தொடப்பட்டு மனமாற்றம் அடையவேண்டும் என்று திருத்தந்தை விரும்புகிறார். இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு இக்காலத்துக்கு அவசியமா? என்ற கேள்வியை, சனிக்கிழமை மாலை திருவழிபாட்டில் மீண்டும் எழுப்பி அதற்குப் பதிலும் தந்துள்ளார் திருத்தந்தை.

“பெரும் வரலாற்று மாற்றம் இடம்பெற்றுவரும் இக்காலத்தில், கடவுளின் இருப்பு மற்றும் அவர் மனிதரோடு மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதை இன்னும் அதிகமான சான்றுகள் மூலம் வெளிப்படுத்த திருஅவை அழைக்கப்படுகின்றது. மிகவும் விழிப்புடன் இருந்து, எது இன்றியமையாதது என்பதை நம்மில் பார்ப்பதற்கு நம்மை நாமே தட்டியெழுப்ப வேண்டும். நம் கடவுளாம் தந்தையின் இரக்கத்தின் அடையாளமாகவும், கருவியாகவும் திருஅவை மாற வேண்டும் (cf.யோவா.20:21-23)” என்று நம் ஆண்டவர் உயிர்ப்பு நாளன்று தனது திருஅவையிடம் கொடுத்த மறைப்பணியின் பொருளை மீண்டும் கண்டுணருவதற்கான காலம் இது....

“இரக்கத்தின் திருமுகம்” என்ற திருத்தந்தையின் ஆணை அறிக்கை, 25 எண்களைக் கொண்டு இரக்கத்தின் புனித ஆண்டு பற்றி விரிவாக விளக்கியுள்ளது. “திருஅவையின் அண்மை வரலாற்றில் டிசம்பர் 8 வளமையானப் பொருளைக் கொண்டுள்ளது. வருகிற டிசம்பர் 8ம் தேதி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டு நிறைவு நாளாகும். இந்தப் புனித ஆண்டு ஆரம்பிக்கும் இந்நாளில், நான் புனிதக் கதவைத் திறப்பேன். இந்த நிகழ்வு உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டுமென்று திருஅவை அதிகமாக உணருகிறது(எண்4). இந்தப் பொதுச்சங்கத்தோடு திருஅவை தனது வரலாற்றின் புதிய தளத்தில் நுழைந்தது. தூய ஆவியாரின் உண்மையான மூச்சுக்காற்றை வலுவாக உணர்ந்த பொதுச்சங்கத் தந்தையர், தம் காலத்து மக்களுக்கு கடவுள் பற்றி  இன்னும் எளிதான வழியில் சென்றடையும் முறையில் பேசவேண்டிய தேவையை உணர்ந்தனர். திருஅவையை மதில் அரண்போன்று நீண்டகாலமாக வைத்திருந்த சுவர்கள் தகர்க்கப்பட்டன மற்றும் நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதற்கான காலம் வந்துள்ளது. இந்த ஜூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழா திருவழிபாட்டுடன் முடிவுக்கு வரும். அந்நாளில் புனிதக் கதவு முத்திரையிடப்படும், மூடப்படும். ஒரு சிறப்பு அருளின் காலத்தை நமக்கு இறைவன் அருளியதற்காக அந்நாளில் நாம் நன்றி கூறுவோம். திருஅவையின் வாழ்வையும், முழு மனித சமுதாயத்தையும் கிறிஸ்து அரசரிடம் அர்ப்பணித்து, ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் ஒன்றிணைந்து சமைப்பதற்கு காலைப் பனித்துளி போல நம்மீது அவரின் இரக்கத்தைப் பொழியுமாறு மன்றாடுவோம்” (எண்.5).

“இரக்கத்தின் திருமுகம்” என்ற திருத்தந்தையின் ஆணை அறிக்கை, “இயேசு கிறிஸ்து, வானகத்தந்தையின் இரக்கத்தின் திருமுகம் என்று சொல்லித் தொடங்குகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் பேருண்மையை இச்சொற்கள் இரத்தினமாகச் சுருக்கியுள்ளன”. இறைஇரக்கம், கருணை என்பது மறைபொருளான சொல் அல்ல, ஆனால் இது இயேசுவின் திருமுகத்தை ஏற்று, தியானித்து அதற்குப் பணிவிடை செய்ய அழைப்பதாகும். நாம் இறைஇரக்கப் பேருண்மையை இடைவிடாமல் தியானிக்க வேண்டும். இது மகிழ்வின், சமாதானத்தின், சாந்தத்தின், மனஅமைதியின் நல்ஊற்றாகும். நம் மீட்பு இதைச் சார்ந்தே உள்ளது. இறைவனின் இரக்கம் என்ற சொல், மூவொரு இறைவனின் பேருண்மையை வெளிப்படுத்துகிறது, இது, கடவுள் நம்மைச் சந்திக்கவரும் மிக உன்னதச் செயலாகும், இறைஇரக்கம் என்பது, நம் வாழ்வுப் பாதையில், நம் சகோதர சகோதரிகளின் கண்களை நேர்மையுடன் உற்றுநோக்குவது, நமது பாவநிலையையும் விடுத்து, நாம் இறைவனால் அன்புகூரப்படுகிறோம் என்ற நம்பிக்கைக்கு நம் இதயங்களைத் திறந்து கடவுளையும் மனிதரையும் இணைக்கும் பாலமாகும்(எண்.2). இரக்கத்தின் உடல் அளவிலான மற்றும் ஆன்மீகப் பணிகள், வறுமையின்முன் நம் மனச்சாட்சிகளைத் தட்டி எழுப்புகின்றன. எனவே கடவுளின் இரக்கத்தில் சிறப்பு அனுபவம் பெற்றுள்ளதை உணர்த்தும் நற்செய்திக்குள் நாம் இன்னும் மிக ஆழமாக நுழைவோம். 

“இரக்கத்தின் மறைப்பணியாளர்களை” (எண்.18) அனுப்புவது பற்றியும் திருத்தந்தை இந்த ஆணை அறிக்கையில் அறிவித்துள்ளார். இவர்கள் இறைமக்களுக்கு திருஅவையின் தாய்மைப் பண்பின் அடையாளமாக இருப்பார்கள். திருப்பீடத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை சில அருள்பணியாளர்களுக்குத் திருத்தந்தை வழங்குவார். மன்னிப்பைத் தேடுபவர்களை இறைவன் மன்னிக்கத் தயாராக உள்ளார் என்பதன் உயிருள்ள அடையாளங்களாக இவர்கள் இருந்து அத்தகைய மக்களை வரவேற்பார்கள். இவர்களே இரக்கத்தின் மறைப்பணியாளர்கள். இந்தப் புனித ஆண்டில் இறைஇரக்கத்தின் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும், இறை இரக்கத்தை அனுபவிக்க வேண்டும், இந்த அழைப்பை யாரும் புறக்கணிக்க வேண்டாமென திருத்தந்தை கேட்டுள்ளார். இறைவனின் அருளிலிருந்து தங்களை அந்நியப்படுத்தும் நடத்தை உள்ளவர்கள் மனம் மாற வேண்டுமென்று மிகுந்த உருக்கத்துடன் அவர்களுக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை. இப்படிச் சொல்லும்போது திட்டமிட்டக் குற்ற நிறுவனங்களைச் சேர்ந்துள்ள ஆண்கள், பெண்கள் அனைவரையும் சிறப்பாக தனது மனதில் நினைத்துச் சொல்வதாக அவ்வாணை அறிக்கையில் கூறியுள்ளார். பாவத்தை வெறுத்தாலும், பாவியை ஒருபோதும் புறக்கணிக்காத இறைமகன் இயேசுவின் பெயரால் இவர்களிடம் இதைக் கேட்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை. 

“இதே அழைப்பை ஊழல் குற்றங்களைச் செய்பவர் அல்லது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் முன்வைக்கிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். ஊழல் குற்றம், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் அடித்தளத்தையே அச்சுறுத்தவதால் இது பெரிய பாவம். ஊழல், நம்பிக்கையோடு வருங்காலத்தை நோக்குவதைத் தடைசெய்கிறது. ஏனெனில் இது வறியவர்களையும், பலவீனர்களையும் அழிப்பதற்குத் திட்டமிடும் பேராசையாகும். ஊழல் ஒரு தீமை, இது துர்மாதிரிகைகளைப் பொதுப்படையாகப் பரப்புகின்றது. வாழ்வை மாற்றுவதற்கு வாய்ப்புள்ள காலம் இது. இறைவனால் தொடப்படுவதற்கு ஏற்ற காலம் இது!” (எண்.19). இரக்கம், யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு பண்பு. இறைவனின் இரக்கத்தைக் கொண்டாடும் இந்த ஜூபிலி ஆண்டில் இந்த மதங்களோடும், பிற உயரிய மத மரபுகளோடும் சந்திப்பு ஊக்கவிக்கப்படும் என்று நம்புகிறேன். ஒருவர் மற்றவரை அறிந்து புரிந்துகொள்ள இந்த ஆண்டு உரையாடலை ஊக்கவிப்பதாக. மூடியமனது மற்றும் மதிப்பற்ற தன்மையை அகற்றுவதாக. ஒவ்வொரு விதமான வன்முறையும் பாகுபாடும் ஒழிவதாக (எண்.23).”

நம் இறைவன் நமக்குத் தொடர்ந்து வழங்கும் இரக்கம் நம் தினசரி வாழ்வில் வாழ்ந்து பகிரப்படுவதாக. கடவுள் நம்மை வியப்புகளால் நிரப்ப இந்த ஜூபிலி ஆண்டில் நம்மை அனுமதிப்போம். அவர் தமது இதயக் கதவுகளைத் திறப்பதற்கு ஒருபோதும் சோர்வடையமாட்டார். அவர் நம்மை அன்பு கூர்கிறார், அவர் தமது அன்பை நம்முடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார் என்று கூறுகிறார் திருத்தந்தை. அதேசமயம் இந்த ஜூபிலி ஆண்டில் மன்னிப்பு, மனவலிமை, அன்பு ஆகிய தெளிவான செய்திகளை திருஅவை வழங்குகிறது. திருஅவையும் இரக்கத்தைப் பொழிவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. எப்போதும் பரிவையும் ஆறுதலையும் வழங்குகின்றது. ‘ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே (தி.பா.25:6).”என்று நம்பிக்கையோடு அனைவரும் மன்றாடுவோம். இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.