2015-04-13 15:19:00

வாரம் ஓர் அலசல் – கருணைக் கடல்களாக மாறுவோம்


ஏப்.13,2015. அன்பு நேயர்களே, இரக்கம், கருணை என்ற உயரிய பண்பு அரக்கனிடமும் உள்ளது. கல்நெஞ்சர் இதயத்திலும், ஓர் ஓரத்தில் கொஞ்சமாவது கருணை இருக்கும், இரக்கம் சுரக்கும். இதற்கு நாம் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தனது பிள்ளைக்கு ஆபத்து என்று அறிந்தவுடன் மனது உருகும் வில்லன்கள் உண்டு. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறைத் தலைமைப் பணியை ஏற்ற நாளிலிருந்து அடிக்கடி பயன்படுத்தி வரும் சொல் இரக்கம், கருணை. இவர் சொல்வது செயலிலும் வெளிப்படுகிறது. உரோமையில் வீடில்லாமல் தெருவில் உறங்கும் மனிதருக்கு இலவச குளியல் அறையல்கள், முடிதிருத்தம் வசதி.. இப்படி பல செயல்கள். இந்தச் சனி, ஞாயிறு தினங்களில்(ஏப்ரல்11, 12) திருத்தந்தை நிறைவேற்றிய நிகழ்வுகளில், இரக்கம், கருணை என்ற சொற்களே அதிகம் ஒலித்தன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், துருக்கி ஒட்டமான் முஸ்லிம் பேரரசின்கீழ், ஏறக்குறைய 15 இலட்சம் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வினப்படுகொலை 1915ம் ஆண்டு ஏப்ரல் 23 மற்றும் 24ம் நாளுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆரம்பமாகி 1918ம் ஆண்டுவரை இடம்பெற்றது. அந்நாளில் ஆர்மேனியக் கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டமான் இராணுவத்தினர் கான்ஸ்ட்டைன் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் ஆர்மேனியப் பொதுமக்களை அவர்களின் உறைவிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு, அதாவது தற்போதைய சிரியாவுக்கு நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது மற்றும் பாலின வேறுபாடின்றி பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மேனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்வது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று முக்கிய கண்டங்கள் சந்திக்கும் ஒரே புள்ளியில் இருந்த தங்கள் தாய் நாட்டை ஆர்மேனியர்கள் இழந்தார்கள். ஆர்மேனிய இனம், கிறிஸ்தவத்தை முதன் முதலாக தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட இனமாகும். இவ்வாறெல்லாம் வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நூறாம் ஆண்டு நிறைவு நிகழ்வை நினைவுகூரும் விதமாக, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஆர்மேனியக் கிறிஸ்தவ முதுபெரும் தந்தையருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் ஆர்மேனிய மறைசாட்சிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை...

“இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்றுள்ள மூன்று முக்கிய இனப்படுகொலைகளில்  முதல் இனப்படுகொலை, ஆர்மேனிய இனப்படுகொலையாகும். ஆர்மேனியக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட நிகழ்வாகும் இது. அடுத்து நாத்சி மற்றும் கம்யூனிச ஆட்சிகளின் படுகொலைகளாகும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இந்த உலகில் உருவாகிய ஆர்வம் ஊக்கமிழந்து மறைந்து வருவதாகத் தெரிகிறது. அப்பாவிகள் இரத்தம் சிந்துவதை தடுக்க இயலா நிலையில் உலகம் உள்ளது. போர் முட்டாள்தனமானது, போர் அறிவற்ற கொலைச் செயல் என்பதை நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை, இந்த நம் காலத்தில் நடப்பது மூன்றாம் உலகப் போர். இக்காலத்தில் துண்டு துண்டாகப் போர் இடம்பெற்று வருகிறது, கொடுமையான முறையில் படுகொலைகள், அறிவற்ற அழிவுகள் என மிருகத்தனமான குற்றங்கள் இடம்பெறுவதற்கு ஒவ்வொரு நாளும் சாட்சி சொல்கின்றன, கிறிஸ்து மீதான விசுவாசத்துக்காக அல்லது தாங்கள் பிறந்த இனத்துக்காக பாதுகாப்பற்ற நம் சகோதர சகோதரிகள் பொது இடங்களில் இரக்கமற்று தலைவெட்டப்படுகின்றனர், சிலுவையில் அறையப்படுகின்றனர், உயிரோடு எரிக்கப்படுகின்றனர் அல்லது தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். நடந்த தீயதை மறுதலித்தல், காயங்களுக்கு மருந்திட மறுத்தலுக்குச் சமமாகும். ஒவ்வொரு மனிதரின் மனமாற்றத்தின் மூலமே உலகில் மாற்றம் இடம்பெறத் தொடங்கும். இது கடவுளின் இரக்கத்தின்மூலமே நடைபெறும்....”

இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆர்மேனியர்கள் இந்தப் படுகொலையை “மாபெரும் குற்றம்” என பெயரிட்டுள்ளனர். இந்த இனப்படுகொலைதான் இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று திருத்தந்தை குறை கூறியதற்கு துருக்கி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஏனெனில் முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த மரணங்கள் என்று கூறி வருகிறது துருக்கி.

உலகில் இடம்பெறும் படுகொலைகளும், வன்செயல்களும், நிறுத்தப்பட தனிமனித மாற்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, “Misericordiae Vultus” அதாவது “இரக்கத்தின் திருமுகம்” என்ற தலைப்பில் இரக்கத்தின் புனித ஆண்டை அறிவிக்கும், ஆணை அறிக்கையையும் (Bull of Indiction) ஏப்ரல் 11, கடந்த சனிக்கிழமை மாலை வெளியிட்டார். வருகிற டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, முந்தைய ஜூபிலி ஆண்டுகள் போல் உரோம் நகரில் மட்டும் சிறப்பிக்கப்படாமல், உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும், மக்கள் பெருமளவாகச் செல்லும் திருத்தலங்களிலும் சிறப்பிக்கப்படுகின்றது. அதன்மூலம் மக்கள் இறையருளால் தொடப்பட்டு மனமாற்றம் அடையவேண்டும் என்று திருத்தந்தை விரும்புகிறார். இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு இக்காலத்துக்கு அவசியமா? என்ற கேள்வியை, சனிக்கிழமை மாலை திருவழிபாட்டில் மீண்டும் எழுப்பி அதற்குப் பதிலும் தந்துள்ளார் திருத்தந்தை. 

“பெரும் வரலாற்று மாற்றம் இடம்பெற்றுவரும் இக்காலத்தில், கடவுளின் இருப்பு மற்றும் அவர் மனிதரோடு மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதை இன்னும் அதிகமான சான்றுகள் மூலம் வெளிப்படுத்த திருஅவை அழைக்கப்படுகின்றது. மிகவும் விழிப்புடன் இருந்து, எது இன்றியமையாதது என்பதை நம்மில் பார்ப்பதற்கு நம்மை நாமே தட்டியெழுப்ப வேண்டும். நம் கடவுளாம் தந்தையின் இரக்கத்தின் அடையாளமாகவும், கருவியாகவும் திருஅவை மாற வேண்டும் (cf.யோவா.20:21-23)” என்று நம் ஆண்டவர் உயிர்ப்பு நாளன்று தனது திருஅவையிடம் கொடுத்த மறைப்பணியின் பொருளை மீண்டும் கண்டுணருவதற்கான காலம் இது....

“இரக்கத்தின் திருமுகம்” என்ற திருத்தந்தையின் ஆணை அறிக்கை, 25 எண்களைக் கொண்டு இரக்கத்தின் புனித ஆண்டு பற்றி விரிவாக விளக்கியுள்ளது. “திருஅவையின் அண்மை வரலாற்றில் டிசம்பர் 8 வளமையானப் பொருளைக் கொண்டுள்ளது. வருகிற டிசம்பர் 8ம் தேதி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டு நிறைவு நாளாகும். இந்தப் புனித ஆண்டு ஆரம்பிக்கும் இந்நாளில், நான் புனிதக் கதவைத் திறப்பேன். இந்த நிகழ்வு உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டுமென்று திருஅவை அதிகமாக உணருகிறது(எண்4). இந்தப் பொதுச்சங்கத்தோடு திருஅவை தனது வரலாற்றின் புதிய தளத்தில் நுழைந்தது. தூய ஆவியாரின் உண்மையான மூச்சுக்காற்றை வலுவாக உணர்ந்த பொதுச்சங்கத் தந்தையர், தம் காலத்து மக்களுக்கு கடவுள் பற்றி  இன்னும் எளிதான வழியில் சென்றடையும் முறையில் பேசவேண்டிய தேவையை உணர்ந்தனர். திருஅவையை மதில் அரண்போன்று நீண்டகாலமாக வைத்திருந்த சுவர்கள் தகர்க்கப்பட்டன மற்றும் நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதற்கான காலம் வந்துள்ளது. இந்த ஜூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழா திருவழிபாட்டுடன் முடிவுக்கு வரும். அந்நாளில் புனிதக் கதவு முத்திரையிடப்படும், மூடப்படும். ஒரு சிறப்பு அருளின் காலத்தை நமக்கு இறைவன் அருளியதற்காக அந்நாளில் நாம் நன்றி கூறுவோம். திருஅவையின் வாழ்வையும், முழு மனித சமுதாயத்தையும் கிறிஸ்து அரசரிடம் அர்ப்பணித்து, ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் ஒன்றிணைந்து சமைப்பதற்கு காலைப் பனித்துளி போல நம்மீது அவரின் இரக்கத்தைப் பொழியுமாறு மன்றாடுவோம்” (எண்.5).

“இரக்கத்தின் திருமுகம்” என்ற திருத்தந்தையின் ஆணை அறிக்கை, “இயேசு கிறிஸ்து, வானகத்தந்தையின் இரக்கத்தின் திருமுகம் என்று சொல்லித் தொடங்குகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் பேருண்மையை இச்சொற்கள் இரத்தினமாகச் சுருக்கியுள்ளன”. இறைஇரக்கம், கருணை என்பது மறைபொருளான சொல் அல்ல, ஆனால் இது இயேசுவின் திருமுகத்தை ஏற்று, தியானித்து அதற்குப் பணிவிடை செய்ய அழைப்பதாகும். நாம் இறைஇரக்கப் பேருண்மையை இடைவிடாமல் தியானிக்க வேண்டும். இது மகிழ்வின், சமாதானத்தின், சாந்தத்தின், மனஅமைதியின் நல்ஊற்றாகும். நம் மீட்பு இதைச் சார்ந்தே உள்ளது. இறைவனின் இரக்கம் என்ற சொல், மூவொரு இறைவனின் பேருண்மையை வெளிப்படுத்துகிறது, இது, கடவுள் நம்மைச் சந்திக்கவரும் மிக உன்னதச் செயலாகும், இறைஇரக்கம் என்பது, நம் வாழ்வுப் பாதையில், நம் சகோதர சகோதரிகளின் கண்களை நேர்மையுடன் உற்றுநோக்குவது, நமது பாவநிலையையும் விடுத்து, நாம் இறைவனால் அன்புகூரப்படுகிறோம் என்ற நம்பிக்கைக்கு நம் இதயங்களைத் திறந்து கடவுளையும் மனிதரையும் இணைக்கும் பாலமாகும்(எண்.2). இரக்கத்தின் உடல் அளவிலான மற்றும் ஆன்மீகப் பணிகள், வறுமையின்முன் நம் மனச்சாட்சிகளைத் தட்டி எழுப்புகின்றன. எனவே கடவுளின் இரக்கத்தில் சிறப்பு அனுபவம் பெற்றுள்ளதை உணர்த்தும் நற்செய்திக்குள் நாம் இன்னும் மிக ஆழமாக நுழைவோம். 

“இரக்கத்தின் மறைப்பணியாளர்களை” (எண்.18) அனுப்புவது பற்றியும் திருத்தந்தை இந்த ஆணை அறிக்கையில் அறிவித்துள்ளார். இவர்கள் இறைமக்களுக்கு திருஅவையின் தாய்மைப் பண்பின் அடையாளமாக இருப்பார்கள். திருப்பீடத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை சில அருள்பணியாளர்களுக்குத் திருத்தந்தை வழங்குவார். மன்னிப்பைத் தேடுபவர்களை இறைவன் மன்னிக்கத் தயாராக உள்ளார் என்பதன் உயிருள்ள அடையாளங்களாக இவர்கள் இருந்து அத்தகைய மக்களை வரவேற்பார்கள். இவர்களே இரக்கத்தின் மறைப்பணியாளர்கள். இந்தப் புனித ஆண்டில் இறைஇரக்கத்தின் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும், இறை இரக்கத்தை அனுபவிக்க வேண்டும், இந்த அழைப்பை யாரும் புறக்கணிக்க வேண்டாமென திருத்தந்தை கேட்டுள்ளார். இறைவனின் அருளிலிருந்து தங்களை அந்நியப்படுத்தும் நடத்தை உள்ளவர்கள் மனம் மாற வேண்டுமென்று மிகுந்த உருக்கத்துடன் அவர்களுக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை. இப்படிச் சொல்லும்போது திட்டமிட்டக் குற்ற நிறுவனங்களைச் சேர்ந்துள்ள ஆண்கள், பெண்கள் அனைவரையும் சிறப்பாக தனது மனதில் நினைத்துச் சொல்வதாக அவ்வாணை அறிக்கையில் கூறியுள்ளார். பாவத்தை வெறுத்தாலும், பாவியை ஒருபோதும் புறக்கணிக்காத இறைமகன் இயேசுவின் பெயரால் இவர்களிடம் இதைக் கேட்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை. 

“இதே அழைப்பை ஊழல் குற்றங்களைச் செய்பவர் அல்லது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் முன்வைக்கிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். ஊழல் குற்றம், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் அடித்தளத்தையே அச்சுறுத்தவதால் இது பெரிய பாவம். ஊழல், நம்பிக்கையோடு வருங்காலத்தை நோக்குவதைத் தடைசெய்கிறது. ஏனெனில் இது வறியவர்களையும், பலவீனர்களையும் அழிப்பதற்குத் திட்டமிடும் பேராசையாகும். ஊழல் ஒரு தீமை, இது துர்மாதிரிகைகளைப் பொதுப்படையாகப் பரப்புகின்றது. வாழ்வை மாற்றுவதற்கு வாய்ப்புள்ள காலம் இது. இறைவனால் தொடப்படுவதற்கு ஏற்ற காலம் இது!” (எண்.19). இரக்கம், யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு பண்பு. இறைவனின் இரக்கத்தைக் கொண்டாடும் இந்த ஜூபிலி ஆண்டில் இந்த மதங்களோடும், பிற உயரிய மத மரபுகளோடும் சந்திப்பு ஊக்கவிக்கப்படும் என்று நம்புகிறேன். ஒருவர் மற்றவரை அறிந்து புரிந்துகொள்ள இந்த ஆண்டு உரையாடலை ஊக்கவிப்பதாக. மூடியமனது மற்றும் மதிப்பற்ற தன்மையை அகற்றுவதாக. ஒவ்வொரு விதமான வன்முறையும் பாகுபாடும் ஒழிவதாக (எண்.23).”

நம் இறைவன் நமக்குத் தொடர்ந்து வழங்கும் இரக்கம் நம் தினசரி வாழ்வில் வாழ்ந்து பகிரப்படுவதாக. கடவுள் நம்மை வியப்புகளால் நிரப்ப இந்த ஜூபிலி ஆண்டில் நம்மை அனுமதிப்போம். அவர் தமது இதயக் கதவுகளைத் திறப்பதற்கு ஒருபோதும் சோர்வடையமாட்டார். அவர் நம்மை அன்பு கூர்கிறார், அவர் தமது அன்பை நம்முடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார் என்று கூறுகிறார் திருத்தந்தை. அதேசமயம் இந்த ஜூபிலி ஆண்டில் மன்னிப்பு, மனவலிமை, அன்பு ஆகிய தெளிவான செய்திகளை திருஅவை வழங்குகிறது. திருஅவையும் இரக்கத்தைப் பொழிவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. எப்போதும் பரிவையும் ஆறுதலையும் வழங்குகின்றது. ‘ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே (தி.பா.25:6).”என்று நம்பிக்கையோடு அனைவரும் மன்றாடுவோம். இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.

ஓர் ஊரில் குயவர் ஒருவர், அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார். அந்த வழியே சென்ற மற்றொருவர், இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார். “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார். அப்படியா? எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளையெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார் அவர். பதறிப்போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார். “உனக்கு மகிழ்வாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர். “நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்கு மகிழ்வு வருமா?” என்றார் கோபமாக. “நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே!” என்றார். குயவருக்கு உண்மை புரிந்தது. எனவே நாமும், இறைவனின் சாயலாக உள்ள நம்முடன் வாழும் மனிதர்களை, சொல்லால் செயலால் கொல்லாமல் இருப்போம். நம் வாழ்வில் இரக்கமும் கருணையும் கடல்களாக நிரம்பட்டும். ஏனெனில் இறைவன் நம்மீது எப்போதும் கருணை காட்டுகிறார். அன்பைப் பொழிகிறார்.  

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.