2015-04-13 15:47:00

நற்செய்தியை அச்சமின்றி அறிவிப்பதே திருஅவையின் பாதை


ஏப்.13,2015. நாம் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் அச்சமின்றி நேர்மையோடு அறிவிப்பதே திருஅவையின் பாதை என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் முதல் வாசகத்தில், புனிதர்கள் பேதுருவும், யோவானும் இயேசுவைப்பற்றி அறிவிக்கக்கூடாது என்று யூத குருக்கள் வழங்கிய கட்டளைகளையும் மீறி, அச்சமின்றி போதித்தது குறித்து எடுத்துரைத்தார்.

திருஅவையின் பாதை என்பது, திறந்த மனதுடன் அச்சமின்றி நடைபோடுவதாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இயேசுவுக்கும் நிக்கதேமுவுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலில் இடம்பெற்ற இரண்டாவது பிறப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

நற்செய்தியை அறிவிக்கும் நமது கடமையானது, நமது ஆன்மீக சமூகத்தில் புது அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்கல்ல, என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நற்செய்தியை அறிவிப்பதே நம் கடமை, அதன்பின் ஆற்றவேண்டியது தூய ஆவியானவரின் செயல், அதுவே நம்மை முன்னோக்கி வழிநடத்திச்செல்கின்றது என்றார்.

மீண்டும் பிறப்பது என இயேசு கூறியதும், தூய ஆவி நம்மை புதுப்பிறப்பாக மாற்றுவதையே எனவும் கூறினார் திருத்த்னதை.

கல்வியறிவற்றவர்களாக இருந்த சீடர்களை, மறைசாட்சிய மரணம் வரை வழிநடத்திச்சென்றவர், தூய ஆவியானவரே, அவரே சீடர்களில் அந்த மாற்றம் உருவாக உதவினார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.