2015-04-13 15:51:00

தனிமனிதரில் ஏற்படும் மாற்றங்கள் வழியே உலகை மாற்ற இயலும்


ஏப்.13,2015. தனிமனிதரில் ஏற்படும் மாற்றங்கள் வழியே உலகை மாற்ற இயலும் என்பதை புனிதர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் என இஞ்ஞாயிறன்று, அர்மீனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலைகளின் நூறாம் ஆண்டு நினைவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

20ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையாக அர்மீனியர்கள் கொலைச்செய்யப்பட்டது இருந்தது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த நூற்றாண்டில் இந்த படுகொலையைத் தொடர்ந்து, மேலும் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை நோக்கும்போது, அப்பாவி மக்களின் இரத்தம் சிந்தல்களை தடைச்செய்ய இயலா மனித குலத்தின் கையாலாகாத நிலையேத் தெரிகின்றது என்றார். இரண்டாம் உலகப் போருக்குப்பின்  உருவெடுத்த அமைதி குறித்த ஆர்வங்கள் படிப்படியாக குறைந்து மறைந்துவிட்டன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறுகிறோம் என்றார்.

இன்றைய உலகில் தனக்கு வேண்டாதவர்களை, சிலரின் உதவியுடன் ஒழிப்பதும், அதை பலர் மௌனமாய் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதும் நடந்துகொண்டிருப்பது மட்டுமல்ல, போர் என்பது ஒரு பெரும் பைத்தியக்காரத்தனம் என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றார்.

அர்மீனியப் படுகொலைகளைத் தொடர்ந்து, நாத்சிக் கொள்கைகளாலும், ஸ்டாலினியக் கொள்கைகளாலும் பலர் உயிரிழந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ருவாண்டா, புருண்டி, கம்போடியா, போஸ்னியா ஆகிய நாடுகளின் படுகொலை நிகழ்வுகள் குறித்தும் கவலையை வெளியிட்டார்.

அர்மீனியா நாட்டில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிப்போம், அவர்களை மறப்பதோ, அல்லது உண்மைகளை மூடிமறைக்க முயல்வதோ, காயங்களுக்கு கட்டுப்போடாமல், அவற்றிலிருந்து தொடர்ந்து இரத்தம் சிந்துவதற்கு அனுமதிப்பதாகும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.