2015-04-11 16:02:00

சரிநிகர்தன்மை மிகவும் நலிந்தவர்களின் சார்பாக இருக்க அழைப்பு


ஏப்.11,2015. தென் அமெரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியில் வளமையும் சரிநிகர்தன்மையும்  இடம்பெற வேண்டும் என்று, பானமாவில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் 2 நாள் உச்சி மாநாட்டுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய அமெரிக்க நாடாகிய பானமாவின் பானமா நகரில் 35 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட 7வது அமெரிக்க உச்சி மாநாட்டுக்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுகள் முதலில் ஒன்றுக்கொன்று உறவுப் பாலங்களைக் கட்டவும், புரிந்துகொள்ளவும் முயற்சித்து தொடர்புகளை ஏற்படுத்தும் கால்வாய்களாகச் செயல்படுமாறு கேட்டுள்ளார்.

நிலம், வேலை, குடியிருப்புவசதி, கல்வி, நலவாழ்வு வசதி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல்  பாதுகாப்பு என, அடிப்படைத் தேவைகளிலிருந்து யாரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, அநீதிகளும் சமத்துவமின்மைகளும் மனித மாண்பைப் புண்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இம்மாநாட்டில் இவ்வெள்ளியன்று வாசித்தார்.

 “சரிநிகர்தன்மையோடு வளமை : அமெரிக்காவில் ஒத்துழைப்பின் சவால்” என்ற தலைப்பில் இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.

மேலும், இம்மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, கியூப அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் முதன்முறையாக கைகுலுக்கினர். இச்சனிக்கிழமையன்று இவ்விரு நாடுகளின் தலைவர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது கியூபப் புரட்சிக்குப் பின்னர் இதுவே முதல் முறையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.