2015-04-11 16:29:00

காங்கோவில் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும், துறவு சபைகள்


ஏப்.11,2015. காங்கோவில் இடம்பெறும் ஆள்கடத்தல்களும், படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும், வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தடுப்பதற்குத் திருஅவையால் உதவ முடியும் என்று அந்நாட்டின் பல்வேறு துறவு சபைகள் கூறின.

காங்கோவின் Beni பகுதிக் கிராமங்களில் ஆட்கள் ஆயுதங்களோடு இரவில் சென்று நூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறாரையும், வயதுவந்தவர்களையும் கடத்திக் கொலைசெய்துள்ளனர் என்று, அந்நாட்டின் Butembo-Beni மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றும் பத்து துறவு சபைகளின் தலைமைக் குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

இவர்கள் கொலைசெய்யப்பட்ட விதம், கொடூரமானது, மனிதமற்றது மற்றும் முட்டாள்தனமானது என்று கூறும் அவ்வறிக்கை, கடத்தப்பட்டவர்கள், கத்திகளாலும், சுத்தியலாலும் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டபோது கிராமங்கள் சூறையாடப்பட்டன, கர்ப்பிணி பெண்கள் உட்பட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர், உருச்சிதைக்கப்பட்டனர் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

ஆப்ரிக்க நாடாகிய காங்கோவில் இடம்பெறும் வன்முறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.