2015-04-11 15:13:00

இறை இரக்கத்தின் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


கருணையின் வடிவே கடவுள் என்பதை எல்லா மதங்களும் ஆணித்தரமாகச் சொல்கின்றன. கருணையே வடிவான கடவுளைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறது…

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, கடவுள் கருணையின் ஞாயிறு, அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக 2000மாம் ஆண்டில் இணைத்தவர், திருத்தந்தை 2ம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இறைவனின் இரக்கத்தில் இரண்டறக் கலந்தார். 2011ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராகவும், 2014ம் ஆண்டு, இதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தையர், 2ம் ஜான்பால் அவர்களையும், 23ம் ஜான் அவர்களையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டபோது, அவர் "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார்.

"இரக்கம் காட்டுவதில் இறைவன் சலிப்படைவதே இல்லை" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சலிப்பின்றி பயன்படுத்தி வரும் தாரக மந்திரம். இவ்வுலகம் ஏங்கித் தவிக்கும் இரக்கத்தையும், அந்த இரக்கத்தின் ஊற்றான இறைவனையும், கொண்டாட, ஒரு சிறப்பு ஆண்டினை ஒதுக்கி, அதை, 'இரக்கத்தின் புனித ஆண்டு' (Holy Year of Mercy) என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அறிவித்துள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையில் பொதுவாக, 25, 50, 100 என்ற எண்களைக் கொண்ட ஆண்டுகள், ஜுபிலி ஆண்டுகளாக, புனித ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த எண்களைக் கொண்டிராத வேறு சில ஆண்டுகளை, சிறப்பான புனித ஆண்டுகளாக திருத்தந்தையர் அறிவிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, நமது மீட்பர் இயேசு உயிர் துறந்தது, கி.பி.33ம் ஆண்டு என்ற கணக்கை அடிப்படையாகக் கொண்டு, 1983ம் ஆண்டில், மீட்பின் வரலாறு 1950 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாட, சிறப்பு ஜுபிலி ஆண்டை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் அறிவித்தார். தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இரக்கத்தின் புனித ஆண்டை' அறிவித்துள்ளார். 1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் அமல உற்பவத் திருநாளன்று 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவடைந்தது. 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், 'இரக்கத்தின் புனித ஆண்டு' 2015ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் திருநாளன்று நிறைவடையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, மார்ச் 13ம் தேதி, தன் தலைமைப் பணியின் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்த நாளன்று, 'இரக்கத்தின் புனித ஆண்டை' அறிவித்தது, பொருத்தமாக இருந்தது. அவரது தலைமைப் பணியின் உயிர்நாடி, இரக்கம் என்பதை, இந்த அறிவிப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது. மார்ச் 13, மாலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 'இறைவனோடு 24 மணி நேரம்' என்ற முயற்சியை, ஒப்புரவு அருள் அடையாள வழிபாட்டுடன் அவர் ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் வழங்கிய மறையுரையில், 'இரக்கத்தின் புனித ஆண்டை' முதன் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். அவரது மறையுரையில் பகிர்ந்துகொண்ட ஒரு சில வரிகள் இதோ:

"அன்பு சகோதர, சகோதரிகளே, இரக்கத்தின் சாட்சியாக, திருஅவை எவ்விதம் பணியாற்ற முடியும் என்பதை அடிக்கடி சிந்தித்து வருகிறேன். எனவே, ஒரு சிறப்பான ஜுபிலி ஆண்டை அறிவிக்க நான் முடிவு செய்துள்ளேன். பாவிகளாகிய நாம், 'இரக்கத்தின் புனித ஆண்டில்' கடவுளின் கருணையை மீண்டும் ஒருமுறை சுவைத்து மகிழ்வோம் என்பது என் நம்பிக்கை. கடவுளின் கருணை தரும் சுகத்தை, இன்றைய உலகின் ஒவ்வோரு மனிதரும் உணர்வதற்கு நாம் உதவ வேண்டும்... மறந்து விடாதீர்கள்... கடவுள் எல்லாரையும் மன்னிக்கிறார், எப்போதும் மன்னிக்கிறார். எனவே, மன்னிப்பு வேண்டுவதில் நாம் சலிப்படைய வேண்டாம்."

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள 'இரக்கத்தின் புனித ஆண்டை'யொட்டி, அவர் எழுதியுள்ள சிறப்பு 'பாப்பிறை ஆணை அறிக்கை' (Papal Bull of Indiction), ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை மாலை, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய நாள் மாலை வழிபாட்டின்போது, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் முகப்பில் அமைந்துள்ள 'புனித கதவு'க்கு முன், வெளியிடப்படுகிறது. இந்தப் புனிதக் கதவு, இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதியன்று திறக்கப்படும். உரோம் நகரில் அமைந்துள்ள ஏனைய மூன்று (புனித மேரி மேஜர், புனித லாத்தரன், புனித பவுல்) பசிலிக்கா ஆலயங்களின் முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவுகளும், இதேபோல், டிசம்பர் 8ம் தேதியன்று திறந்துவைக்கப்படும். அடுத்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முடிய திறந்து வைக்கப்படவிருக்கும் புனிதக் கதவுகள், நமக்காக எப்போதும் திறந்தே இருக்கும் இறைவனின் இதயத்தை நினைவுறுத்தும் ஓர் அடையாளம்.

இருகரம் விரித்து, இதயத்தைத் திறந்து, காத்திருக்கும் இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் பலச் சூழல்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக, நம் வாழ்வில் சந்தேகப் புயல்கள் வீசும்போது, இறைவன், அவற்றை அடக்கி, அமைதியைக் கொணரும் நேரத்தில், இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். சந்தேகப் புயலில் சிக்கித் தவித்தச் சீடர்களை, குறிப்பாக, தோமாவை, தன் இரக்கத்தின் சிகரத்திற்கு இயேசு அழைத்துச்சென்ற நிகழ்வை, இன்றைய நற்செய்தியாக (யோவான் 20:19-31) வாசிக்கிறோம்.

சந்தேகத்திற்கு ஓர் அடையாளமாக, ‘தோமையார்’ என்று அழைக்கப்படும் தோமா சுட்டிக்காட்டப்படுகிறார். உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அவ்வாறே, சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் அடையாளமாகவே மாறிவிட்டார். இயேசுவின் உயிர்ப்பை அவர் சந்தேகப்பட்டார் என்றதால் அவருக்கு இந்த அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.

நாம் நான்கு நற்செய்திகளையும் அலசிப் பார்த்தால், இயேசுவின் உயிர்ப்பை தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழிலையும், குடும்ப உறவுகளையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று மாறிவந்த நேரத்தில், அந்த உலகம், ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. எருசலேமில், கல்வாரியில் சீடர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசு, அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில் ஒருவனே இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்ததால், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கையும் தொலைந்து போனது. சிலுவையில், ஒரு கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள். அந்த கல்வாரிக்குப்பின், சிலுவைக்குப்பின் ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்துவிட்டனர்.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட ஓர் அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்தச் சீடர்களை இயேசு அப்படியே தவிக்கவிட்டுவிடவில்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்டக் கதவுகள், இயேசுவுக்கு, ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை.  இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.

மூடப்பட்டக் கல்லறை, சாத்தப்பட்டக் கதவு என்ற தடைகள் அனைத்தையும் தாண்டி, சீடர்கள் வாழ்வில் இயேசு மீண்டும் நுழைந்தது, அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கவேண்டும். ஆனந்த அதிர்ச்சிகளால் நாம் தாக்கப்படும்போது, "என்னால் இதை நம்பமுடியவில்லையே!" என்று, சந்தேகமும் மகிழ்வும் கலந்த ஓர் உணர்வில் திணறுகிறோம்.

இயேசுவை மீண்டும் உயிரோடு சந்தித்தச் சீடர்களுக்கு, குறிப்பாக, தோமாவுக்கு இந்த நிலை உருவானது. தன் உயிர்ப்பை நம்பமுடியாமல் தவித்தச் சீடர்களின் சந்தேகத்தைப் போக்க, இயேசு அவர்களில் ஒருவராக மீண்டும் மாறினார். அவர்களிடம் இருந்த உணவைப் பகிர்ந்துகொண்டார். தன்னைத் தொட்டுப் பார்க்க அழைப்பு விடுத்தார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 20: 27,29)

நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும் சிந்தனையையும் இறுகப் பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு செய்து காட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க, சில வேளைகளில், வாய் வார்த்தைகள் மட்டும் போதாது; ஆங்கிலத்தில் சொல்வதுபோல், 'physical proof', உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது. வாய் வார்த்தைகளாலும், தன் உடலையை நிரூபணமாக அளித்ததாலும் தோமாவையும், மற்ற சீடர்களையும், அவர்கள் புதைந்து போயிருந்த நம்பிக்கையற்ற கல்லறைகளிலிருந்து இயேசு உயிர்ப்பித்தார்.

தன்னைத் தொடும்படி இயேசு தந்த அழைப்பைக் கேட்டு, தோமா அவரைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே அவர் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 20: 28) என்ற மிக மிக ஆழமான மறையுண்மையை தோமா பறைசாற்றினார். இயேசுவை, கடவுள் என்று அறிக்கையிட்ட முதல் மனிதப்பிறவி தோமாதான். இயேசு, தோமாவை, இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்டுணர்ந்த அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவிலும் பறைசாற்றினார் திருத்தூதர் தோமா.

உயிர்த்த இயேசுவை நம்புவதற்கு, நிபந்தனைகள் விதித்தார், தோமா. இயேசுவோ, நிபந்தனைகள் ஏதுமின்றி அவரைத் தேடிச்சென்று, தன் இரக்கத்தால், அன்பால் அவரை நிரப்பினார். சந்தேகத்தில் சிறைப்பட்டிருந்த தோமா, அச்சிறையிலிருந்து விடுபட்டதும், இறை இரக்கத்தின் திருத்தூதராக உலகெங்கும் சென்று, சந்தேகச் சிறைகளில் தவித்த பலருக்கு நற்செய்தியை அறிவித்தார்.

இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும் நாம், நிபந்தனைகள் ஏதுமின்றி நம்மை ஒவ்வோரு நாளும் தேடிவரும் இறைவனை நம் வாழ்வில் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற மன்றாடுவோம். நம் குடும்ப உறவுகள், சந்தேகம் என்ற சிறைக்குள் சிக்கியிருந்தால், இறைவனின் இரக்கம், சந்தேகச் சிறைகளைத் தகர்த்து, நம்மை விடுதலை செய்ய மன்றாடுவோம். முன்பு எப்போதும் இல்லாத வகையில், இவ்வுலகிற்கு தற்போது மிகவும் தேவையான இரக்கம் என்ற உன்னதப் பண்பு, இவ்வாண்டின் இறுதியில் துவங்கவிருக்கும் 'இரக்கத்தின் புனித ஆண்டில்' இவ்வுலகெங்கும் இரக்கம் நிலைபெறவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.

இறைவனின் இரக்கம், சந்தேகப் புயல்களை அடக்கும்;  சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். அந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.