2015-04-10 15:36:00

பிலிப்பின்சில் நிலச்சீர்திருத்தம் கொண்டுவர இதுவே நேரம்


ஏப்.10,2015. பிலிப்பின்ஸ் நாட்டில் நிலச்சீர்திருத்தம் கொண்டுவருவதற்கு உடனடி தேவை ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது பிலிப்பின்ஸ் காரித்தாஸ் நிறுவனம்.

விவசாயிகளுக்கு நீதி வழங்குவதாக, அந்நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Corazon Aquino அவர்கள் உறுதி கூறியதை, அவரின் மகனான தற்போதைய அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார் பிலிப்பின்ஸ் காரித்தாஸ் நிறுவனத் தலைவர் பேராயர் Rolando Tiron.

பிலிப்பின்ஸ் அரசியல் அமைப்பின்படி, நிலமற்ற விவசாயிகளுக்கு வேளாண் நிலங்களைப் பங்கிட்டுக் கொடுப்பது அரசின் கடமை என்று கூறியுள்ள Caceres உயர்மறைமாவட்ட பேராயர் Tiron அவர்கள், நிலமற்ற இலட்சக்கணக்கான விவசாயிகள் அநீதியால் துன்புறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.

நிலச்சீர்திருத்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்காக முப்பது ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர் என்பதையும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இரு ஆயர்கள், துறவிகள், அரசு-சாரா அமைப்பின் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து, நிலச்சீர்திருத்தத்துக்கு விண்ணப்பிக்கும் மனு ஒன்றில் கையெழுத்திட்டு அரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார் பேராயர் Tiron.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.