2015-04-10 15:08:00

திருத்தந்தை, ஜார்ஜிய குடியரசுத் தலைவர் சந்திப்பு


ஏப்.10,,2015. ஜார்ஜிய குடியரசுத் தலைவர் Giorgi Margvelashvili அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri அவர்களையும் சந்தித்துப் பேசினார் ஜார்ஜிய தலைவர் Margvelashvili.

இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பகம், ஜார்ஜியாவுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நல்லுறவுகள், இன்னும், ஜார்ஜியாவின் பொது நலனில், குறிப்பாக, பிறரன்பு மற்றும் கல்வித் துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் பணிகள் திருப்தியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது என்று கூறியது.

ஜார்ஜியப் பகுதியில் இடம்பெறும் நெருக்கடி நிலைகளைக் குறிப்பிட்டு, எந்த ஒரு பிரச்சனையும், அனைத்துலகச் சட்டத்துக்கு ஒத்திணங்கும் வகையில், பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண வேண்டுமென்பது இச்சந்திப்புக்களில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், Sant’Egidio பிறரன்புக் குழுவைத் தோற்றுவித்த பேராசிரியர் Andrea Riccardi, திருமதி Marita Perceval, அர்ஜென்டீனா ஆர்மேனியத் திருஅவைத் தலைவர் பேராயர் Mouradian Kissag, அவரோடு இருந்த இருபது பேர் போன்றோரையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.