2015-04-10 15:41:00

கடும் வறுமையை ஒழிப்பதற்கு உலக வங்கியுடன் காரித்தாஸ்


ஏப்.10,2015. 2030ம் ஆண்டுக்குள் உலகில் நிலவும் கடும் வறுமையை ஒழிப்பதற்கு அழைப்பு விடுக்கும் செயல்திட்டம் ஒன்றுக்கு, அனைத்துலக காரித்தாஸ் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட உலகின் முக்கிய மதங்களின் தலைவர்களும், மதம் சார்ந்த நிறுவனத் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

“கடும் வறுமை ஒழிப்பு : நன்னெறி மற்றும் ஆன்மீக முறையில் கட்டாயம் ஆற்றவேண்டியவை” எனும் தலைப்பில் இப்புதிய செயல்திட்டத்துக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் இத்தலைவர்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் கடும் ஏழ்மையில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய 200 கோடியிலிருந்து நூறு கோடிக்குக் குறைவாக வந்துள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் கடும் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்பதை உலக வங்கிக் குழுமமும், மற்றவர்களும் நிரூபித்துள்ளனர் என்றும் கூறியது.

2015ம் ஆண்டில் அரசுகள், புதிய உலகளாவிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை அமைக்கவுள்ளவேளை, மதம் சார்ந்த அமைப்புகளும் கடும் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது இவ்வறிக்கை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.