2015-04-10 15:32:00

Yarmouk புலம்பெயர்ந்தவர் முகாம் பெரும் அவமானம்


ஏப்.10,2015. சிரியா நாட்டின் தலைநகர் தமஸ்கு நகருக்கு வெளியே அமைந்துள்ள Yarmouk புலம்பெயர்ந்தோர் முகாமை ஐ.எஸ். இஸ்லாம் அரசின் படைகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளவேளை, அந்நகருக்கு எதிராக அப்படைகள் கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளனர் தலத்திருஅவை அதிகாரிகள்.

இஸ்லாமிய அரசுப் படைகளின் இந்த ஆக்ரமிப்பு பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, தமஸ்கு நகரிலுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ ஜெனாரி அவர்கள், இந்த முகாமில் வாழும் மக்களின் நிலை, ஏற்கனவே பல மாதங்களாக அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருந்தது என்று கூறினார்.

Yarmouk புலம்பெயர்ந்தோர் முகாமை ஐ.எஸ். அரசின் படைகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அம்முகாம் பற்றி நினைத்துப் பார்ப்பது  பெரும் அவமானம் என்றும் குறை கூறினார் பேராயர் ஜெனாரி.

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுப் போரால் Yarmouk முகாம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆக்ரமிப்பின்கீழ் இருந்து வருகிறது என்றும், அம்முகாமுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதில்லை, 3,500க்கும் மேற்பட்ட சிறார் பசியோடும், வீடுகள் இன்றியும் உள்ளனர் என்றும் கூறினார் பேராயர் ஜெனாரி.

இந்த முகாம், மனிதமற்ற நிலையையும் கடந்து மிகவும் மோசமாக உள்ளது என்ற ஐ.நா. அறிக்கையையும் பேராயர் மாரியோ ஜெனாரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.