2015-04-09 16:01:00

ஒப்புரவை வளர்ப்பது ஆசியத் திருஅவையின் பணி–கர்தினால் Maung Bo


ஏப்.09,2015. ஒப்புரவை வளர்ப்பவர்களாகவும், அமைதியைக் கட்டியெழுப்புகிறவர்களாகவும் ஆசிய மக்களை உருவாக்குவது, ஆசிய திருஅவையின் முக்கியமானப் பணி என்று ஆசியக் கர்தினால் ஒருவர் கூறினார்.

"ஆசியச் சூழலில் ஒப்புரவும், அமைதியும்" என்ற தலைப்பில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய மியான்மாரின் முதல் கர்தினால் Charles Maung Bo அவர்கள், 14 நாடுகளிலிருந்து வந்திருந்த கருத்தரங்கு பங்கேற்பாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரைக் கொண்டுள்ள ஆசியா, மதம், கலாச்சாரம், பொருளாதாரம், மொழி என்ற அனைத்துத் துறைகளிலும் பன்முகம் கொண்ட ஓர் அழகியக் கண்டம் என்று கர்தினால் Maung Bo அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மதம், கலாச்சாரம், அரசியல் ஆகிய சமுதாயக் கூறுகள், தனித்தும், ஒருங்கிணைந்தும் செயலாற்றும்போது, மக்களை ஒன்றிணைக்கவும், பிரிக்கவும் சக்தி பெற்றவை என்பதை உணர்ந்து, பிரிக்கும் சக்திகளை அழிப்பது, தங்கள் முக்கியப்பணி என்பதை ஆசியத் திருஅவை உணரவேண்டும் என்று கர்தினால் Maung Bo அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.