2015-04-08 17:09:00

மரணதண்டனைக்கு எதிராக, Massachusetts ஆயர்கள்


ஏப்,08,2015. ஒவ்வொரு மனித உயிரும் இறைவன் வழங்கும் கொடை என்பதால், அந்தக் கொடையை மாண்புடன் பேணிக் காப்பது நம் கடமை என்று Massachusetts பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

2013ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற பாஸ்டன் மாரத்தான் பந்தய நிகழ்வின் போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பிடிப்பட்ட Dzhokhar Tsarnaev என்ற இளைஞரின் வழக்கு தீர்ப்பை நெருங்கியுள்ள இவ்வேளையில், அவருக்கு மரணதண்டனை வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி Massachusetts பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஆயர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர்.

மனித உயிர் தன்னிலேயே மாண்பு மிக்கது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் மனித உயிரைப் பறிக்கும் உரிமை நமக்கு இல்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள செய்தியை அமெரிக்க ஆயர்கள் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

2013ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், மூவர் கொலையுண்டனர், மற்றும் காயமடைந்த 264 பேரில், 17 பேர் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.