2015-04-08 16:41:00

ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய ‘கேக்’குகள்


ஏப்,08,2015. உரோம் நகரில், உயிர்ப்புத் திருவிழிப்புச் சடங்கை நான் முன்னின்று நடத்தினாலும், என் உள்ளம் ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் இருக்கும்; அவர்கள் என் எண்ணத்தைவிட்டு ஒருபோதும் அகலமாட்டார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ISIS அடிப்படைவாத அமைப்பினரின் வன்முறைகளால், ஈராக் நாட்டில் தங்கள் இல்லங்களை இழந்து, புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள கல்தேய வழிபாட்டு முறை கிறிஸ்தவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் பகிர்ந்துகொண்டார்.  

ஈராக் நாட்டின் எர்பில் (Erbil) நகர் முகாமில் நடைபெற்ற புனித வார நிகழ்வுகளில், திருத்தந்தையின் சார்பில் கலந்துகொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த இனிப்புக்களையும், செபமாலைகளையும் அம்மக்களுக்கு அளித்தார்.

கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் தலைமையேற்று நடத்திய புனித வார நிகழ்வுகளில், எர்பில் பேராயர் பஷார் வர்தா அவர்களும் கலந்துகொண்டார்.

உரோம் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியிருந்த 6000 கேக்குகள் மற்றும் 10,000 செபமாலைகளை இத்தாலிய விமானம், எர்பில் நகருக்கு சுமந்து சென்றது என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இதற்கிடையே, அன்டார்டிகாவில் தங்கி பணியாற்றும் ஆர்ஜென்டீனா இராணுவ வீரர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்புத் திருநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக Zenit செய்தி கூறுகிறது.

ஏப்ரல் 4, புனித சனிக்கிழமையன்று, திருத்தந்தையின் அழைப்பை, தொலைபேசி வழியே பெற்ற இராணுவத் தலைவர், Gabriel Almada அவர்கள், தன்னால் மறக்க முடியாத நாள் அதுவென்று கண்ணீர் மல்கக் கூறினார்.

ஆதாரம் : CNA / Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.