2015-04-08 16:30:00

இறையடி சேர்ந்த Montreal முன்னாள் பேராயர், கர்தினால் Turcotte


ஏப்,08,2015. கனடாவின் Montreal உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், கர்தினால் Jean-Claude Turcotte அவர்கள் இறையடி சேர்ந்ததையடுத்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை, அவரது குடும்பத்தினருக்கும், அம்மறைமாவட்டத்திற்கும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் இவ்வேளையில், கிறிஸ்துவின் உண்மையான ஆயராகப் பணியாற்றிய கர்தினால் Turcotte அவர்களை, முடிவில்லா வாழ்வுக்கு இறைவன் அழைத்துச் செல்வாராக என்று திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1936ம் ஆண்டு, Montreal நகரில் பிறந்த கர்தினால் Turcotte அவர்கள், இப்புதனன்று, தன் 78வது வயதில் இறையடி சேர்ந்தார்.

1959ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1974ம் ஆண்டு, ஆயராகவும் திருநிலை படுத்தப்பட்ட கர்தினால் Turcotte அவர்கள், 1994ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

1990ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய Montreal உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Turcotte அவர்கள், கனடா ஆயர் பேரவையின் தலைவராக மூன்றாண்டுகள் பொறுப்பேற்றார்.

கர்தினால் Turcotte அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை, 225 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையோரின் எண்ணிக்கை 122 ஆகவும் அமைந்துள்ளது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.