2015-04-08 15:29:00

அமைதி ஆர்வலர்கள் : 1977ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


ஏப்.08,2015. 1977ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் (AI) எனும் அரசு-சாரா அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. உலகில் இடம்பெறும் சித்ரவதைகளுக்கு எதிராக இந்நிறுவனம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த அமைதி விருது வழங்கப்பட்டது. இந்நிறுவனம், மனித உரிமைகளுக்காக ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி, 1978ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் விருதும் இதற்கு கொடுக்கப்பட்டது. உலகில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவும், மனித உரிமை மீறல்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கவும் இந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. “இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவது மேல்” என்ற விருதுவாக்குடன், மனித உரிமைகள் துறையில் நீண்ட கால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம். ஆம்னெஸ்டி என்று சுருக்கமாக இது அழைக்கப்படுகிறது.

Peter Benenson என்ற ஆங்கிலேய வழக்கறிஞர் 1960ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி இலண்டன் பாதாள இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, Coimbraவைச் சேர்ந்த இரு போர்த்துக்கீசிய மாணவர்கள், போர்த்துக்கல் நாட்டில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை தினத்தாளில் வாசித்தார். லிஸ்பன் உணவகம் ஒன்றில் குடிபோதையில் "சுதந்திரத்துக்கு வாழ்த்து"(having drunk a toast to liberty) என்று சொல்லி மகிழ்ந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 1960ம் ஆண்டில் António de Oliveira Salazar என்பவரின் ஆட்சி போர்த்துக்கல் நாட்டில் நடந்தது. இவரின் அரசு சர்வாதிகாரப் போக்குடன், நாட்டுக்கு எதிரானவர்களை, எதிர்போர்த்துக்கீசியர்கள் என்று சொல்லி அடக்கி ஆண்டு வந்தது. இந்த இரு இளையோர் கைதானதைத் தொடர்ந்து, "மறக்கப்பட்ட கைதிகள்"(The Forgotten Prisoners) என்ற ஒரு கட்டுரையை The Observer தினத்தாளில் 1961ம் ஆண்டு மே 28ம் தேதி பிரசுரித்தார் Benenson. இவர்  தனது கட்டுரையில்....

வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் உங்களின் தினத்தாளைத் திறந்து பாருங்கள். தனது கொள்கைகள் அல்லது தனது மத நம்பிக்கை, தனது அரசால் ஏற்கப்படாத காரணத்தால், உலகில் ஏதாவது ஓரிடத்தில் யாராவது ஒருவர் கைது செய்யப்படுதல், சித்ரவதைக்குள்ளாதல் அல்லது தூக்கிலிடப்படுதல் போன்றவற்றை வாசிப்பீர்கள். அச்செய்தியை வாசிப்பவர் தனது கையாலாக நிலைமையை உணருவார். எனினும், இந்த உணர்வுகள் ஒன்றிணைந்தால் ஏதாவது பயனுள்ள ஒன்றைச் செய்ய முடியும்...

இப்படி Benenson அவர்கள் பிரசுரித்த தனது கட்டுரையில், பத்திரிகை சுதந்திரம், அரசியல் எதிர்ப்புகள் போன்ற சூழலில் உலக அளவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியதோடு, இவை, அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 18 மற்றும் 19ம் எண்களை அரசுகள் மீறுவதாகவும் உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார். "மறக்கப்பட்ட கைதிகள்" என்ற கட்டுரை, தங்களின் மனச்சாட்சியின் கொள்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளோர், சித்ரவதைக்குள்ளாவோர், தூக்கிலிடப்படுவோர் மீது பலரின் கவனத்தை திருப்பியது. நீதி மற்றும் சுதந்திரத்துக்கு ஒருமைப்பாட்டுணர்வில் ஒன்றிணைவோம் என்று Benenson அவர்கள் விடுத்த அழைப்பு வியக்கத்தக்க வகையில் மக்கள் பலரின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியது. இக்கட்டுரை, உலகெங்கும் தினத்தாள்களில் மறுமுறையும் பிரசுரிக்கப்பட்டது. இதன் பயனாக பிறந்ததே ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் நிறுவனம். Benenson அவர்கள், தனது நண்பர் Eric Baker அவர்களுடன் சேர்ந்து உழைத்தார். பிரித்தானியாவில் அணு ஆயுதக் களைவுக்கு எதிரான போராட்ட அமைப்புக்கு நிதி சேர்க்கும் சமய நண்பர்கள் கழகத்தின் உறுப்பினராகவும், Quaker Peace மற்றும் Social Witness அமைப்பின் தலைவராகவும் இருந்தவர் Eric Baker. தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு Baker உதவியாக இருந்தார் என்று Benenson அவர்களே கூறியிருக்கிறார். இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவதே மேல் என்ற சீனப் பழமொழியை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்தைத் தொடங்கினார் Benenson. 

தாமதிக்கும் நீதி, மறுக்கப்படும் நீதி என்று சொல்லப்படுகின்றது. எங்கெங்கு நீதி தாமதிக்கப்படுகின்றதோ, எங்கெங்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து வருகிறது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம். இலங்கையில் இனப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை தாமதப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது அது குறித்து உடனடியாக எச்சரித்தது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல். அஜெர்பைஜான் நாட்டுத் தலைநகர் Bakuவில், வருகிற ஜூன் 12 முதல் 28 வரை ஐரோப்பிய விளையாட்டுகள் நடைபெறவுள்ளன. ஆறாயிரம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இவ்விளையாட்டுகள் தொடங்குவதற்கு நூறு நாள்களுக்கு முன்னதாகவே, அஜெர்பைஜான் நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்து உலகினருக்குத் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் குறைந்தது 22 மனச்சான்றின் கைதிகள் உள்ளனர். பேச்சு சுதந்திரம், கூட்டம் நடத்துவதற்கான சுதந்திரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் அரசுத்தலைவர் Ilham Aliyev அவர்களின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அஜெர்பைஜானில் குறைந்தது 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்திகளை வெளியிட்டது. ஈரானில் குர்த் இன சிறுபான்மையினரில் ஆறு சுன்னிப் பிரிவு முஸ்லிம்களின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கடைசி நேரம்வரை வேண்டுகோள் விடுத்தது இந்நிறுவனம்.

இப்படி மரண தண்டனை கைதிகள், மனச்சான்றுக் கைதிகள், அரசியல் கைதிகள் என அநீதிகள் இடம்பெறும் இடங்களில் அதனை உலகுக்கு வெளிப்படுத்தி அநீதிகளைக் களைவதற்கு முயற்சித்து வருகிறது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல். ஆம்னெஸ்டி என்று பரவலாக அழைக்கப்படும் இந்த அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனத்தில் உலக அளவில் எழுபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எந்தவித அரசியல் கருத்தியல், பொருளாதார அல்லது மத ஆதாயமும் இன்றி அனைத்து மக்களும் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு இதன் உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர். மனித உரிமைகளை மீறும் எந்த நாடும் இந்நிறுவனத்தின் கண்டனத்திலிருந்து தப்பித்தது கிடையாது. அரசியல் கைதிகளின் விடுதலை, மரண தண்டனையை இரத்து செய்தல் போன்றவற்றுக்காவும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வருகிறது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல். இந்நிறுவனத்தின் உறுப்பினராகி, நெருக்கடியை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவுவதற்கு அழைப்பு விடுக்கிறது  ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.