2015-04-08 17:02:00

அனைத்துலக ரோமா நாளையொட்டி, வெளியிடப்பட்ட செய்தி


ஏப்,08,2015. பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் சார்ந்தவர்களாயினும், ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்று ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர், கர்தினால் Peter Erdo அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 8, இப்புதனன்று கொண்டாடப்படும் அனைத்துலக ரோமா நாளையொட்டி, ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும், ஏனைய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரான ரோமா இனத்தவர், பல்வேறு பிரச்சனைகள் நடுவிலும், தங்கள் கலாச்சாரத்தைப் பேணிக் காத்து வருவது போற்றுதற்குரியது என்று ஒன்றிணைந்த கிறிஸ்தவ சபைகளின் செய்தி பாராட்டு தெரிவித்துள்ளது.

குடும்ப உணர்வு, குழந்தைகளிடம் காட்டப்படும் அக்கறை, இறந்தோருக்கு வழங்கப்படும் மரியாதை போன்ற உன்னதமான கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட ரோமா இனத்தவர் மத்தியில், தகுதியான கல்வியறிவு இல்லாமை, வேலையில்லா நிலை, ஆகிய பிரச்சனைகளும் உள்ளன என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ரோமா இனத்தவர் சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.