2015-04-07 16:03:00

கென்யாவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக செபிக்க அழைப்பு


ஏப்.,07,2015. கென்யா நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து விசுவாசிகளும் இந்த கிறிஸ்து உயிர்ப்புக் காலத்தில் தனிப்பட்ட விதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் கென்ய ஆயர் பேரவைத் தலைவர்  கர்தினால் John Njue.

இம்மாதம் 2ம் தேதி சொமாலியாவைச் சேர்ந்த al-Shabaab தீவிரவாதிகள் Garissa பல்கலைக் கழகத்தில் நுழைந்து, கிறிஸ்தவ மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்றதைப் பற்றி தன் கவலையை வெளியிட்ட நைரோபி பேராயர் கர்தினால் Njue அவர்கள், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கென ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்றார்.

148 பேரின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ இந்த‌ Garissa பல்கலைக்கழக தாக்குதல், கென்ய ஆயர் பேரவைக்கு ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், செபத்துடன் கூடிய ஒருமைப்பாட்டில் மக்களுடன் ஒன்றித்திருப்பதாகவும் கர்தினால் Njue அவர்கள் கூறினார்.

கென்யாவில் பாதுகாப்பற்ற சூழல்களிலும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு, இது கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிகழும் போரின் விளைவு என்ற தப்பெண்ணத்தை உருவாக்காமல் இருப்பதில் முக்கியக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார் கென்ய ஆயர் பேரவைத் தலைவர். 

ஆதாரம் : CNS\ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.