2015-04-07 16:08:00

கல்வி நிலையங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்


ஏப்.,07,2015. கல்வி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடந்த 10 ஆண்டுகளில் இவ்வுலகில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது.

உலகில் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளை, கல்வி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களும் அதிகரித்துவருவதாகக் கூறும் இந்த அறிக்கை, 2004ம் ஆண்டில் 2 விழுக்காடாக இருந்த இத்தாக்குதல்கள், 2013ம் ஆண்டில் 3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறது.

மொத்தத் தாக்குதல்களில், கல்வி நிலையங்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் 3 விழுக்காடாக இருப்பது பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கை, இத்தாக்குதல்கள் பெருமெண்ணிக்கையில் தெற்கு ஆசியாவிலும் மத்தியக் கிழக்கிலுமே இடம்பெறுவதாகவும் கூறுகிறது.

மேற்கத்திய கல்விமுறையை எதிர்க்கும் நைஜீரிய Boko Haram தீவிரவாத இயக்கம், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கின் தீவிரவாத அமைப்புக்கள் போன்றவற்றால் கல்வி நிலையங்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் தாக்கப்படும்போது கிட்டும் விளம்பரம், தங்களைத் தாக்கமுடியாத மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், அரசின் மீது எழும் கோபத்தைக் காண்பிப்பதற்கு அரசு நிறுவனங்களைத் தாக்குதல் போன்ற காரணங்களாலேயே, இத்தகைய கல்வி நிலையங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின், கல்விநிலையங்கள் மீதான அண்மை தாக்குதல்களைக் கண்டித்துள்ள இஸ்லாமியத் தலைவர்கள், அப்பாவி மக்களையும், பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : The Atlantic\வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.