2015-04-07 15:00:00

இரு புதல்வர்கள் உவமை – பகுதி - 1


கடந்த ஏழு வாரங்களாக நாம் பயணித்த தவக்காலத்தின் விவிலியத் தேடல்களில், நாம் கல்வாரிக்குச் சென்றிருந்தோம். அங்கு, சிலுவையில், இயேசு கூறிய ஏழு இறுதி வாக்கியங்களை நாம் சிந்தித்தோம். அன்பு, மன்னிப்பு, தியாகம், என்ற அனைத்து உன்னதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இயேசு, சிலுவையில் உதிர்த்த பொன் மொழிகளின் தாக்கம், நாம் தற்போது சிறப்பிக்கும் உயிர்ப்புக் காலத்தில் நம்மைத் தொடர வேண்டும் என்ற வேண்டுதலோடு, இன்றைய விவிலியத் தேடலைத் துவக்குவோம்.

கல்வாரியை விட்டு இறங்கிவந்துள்ள நாம், நற்செய்தியாளர் மத்தேயு அவர்கள் பதிவு செய்துள்ள உவமைகளில் நம் தேடல் பயணத்தைத் தொடர்கிறோம். நாம் இறுதியாகச் சிந்தித்தது, "திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை". இது மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படும் ஓர் உவமை என்பது நாம் அறிந்ததே. இன்று, மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள 'இரு புதல்வர்கள் உவமை' என்ற மற்றொரு உவமையில் நம் பயணம் துவங்குகிறது. தனித்துவம் மிக்க இந்த உவமைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்னர், இவ்வுவமையை இயேசு சொல்வதற்குத் தூண்டுதலாக அமைந்தச் சூழலைப் புரிந்துகொள்வது பயன் தரும். அச்சூழலை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்விதம் விவரிக்கிறார்.

மத்தேயு நற்செய்தி 21: 23-27

இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார். அவர்கள், “'விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், 'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். 'மனிதரிடமிருந்து' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

எந்த அதிகாரத்தால் இயேசு இவற்றைச் செய்கிறார் என்று தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் கேட்டபோது, 'இவற்றை' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த ஒரு சொல்லில் இயேசுவின் செயல்பாடுகள் பலவற்றை அவர்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?” என்ற கேள்வியைப் புரிந்துகொள்ள, இயேசு எருசலேமில் நுழைந்ததிலிருந்து நடந்தவற்றைப் பின்னோக்கிப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 21ம் பிரிவில் இயேசுவின் செயல்பாடுகளாக நாம் காண்பது இவையே:

இயேசு எருசலேமில் நுழைந்ததிலிருந்து, அவரை மையப்படுத்தி நிகழ்ந்த அனைத்தும், மதத் தலைவர்களின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கின. இந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் ஒரு நாளோடு முடிந்துவிடும் என்று கற்பனை செய்திருந்த மதத்தலைவர்களுக்கு, மறுநாளும் அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த நாள், தான் சுத்தம் செய்திருந்த கோவிலுக்குள் நுழைந்து, இயேசு கற்பித்துக் கொண்டிருந்தார். மதத்தலைவர்களுக்குள் தேங்கிக் கிடந்த அதிர்ச்சி, ஆத்திரம் அனைத்தும் திரண்டு, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” (மத். 21: 23) என்ற கேள்வியாக வெடித்தது.

பொதுவாக, கேள்வியொன்று கேட்கப்பட்டால், அதற்குரியப் பதிலை எதிர்பார்ப்போம். கேட்கப்படும் கேள்வி உண்மையானத் தேடலாக இருந்தால், அதற்கு இயேசு நிச்சயம் பதில் அளித்திருப்பார். ஆனால், மதத்தலைவர்களிடமிருந்து பாய்ந்தக் கேள்வி, உள்நோக்கம் கொண்டதாய் இருந்ததால், இயேசு அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், மறுகேள்வி கேட்டார். இயேசுவுக்கும், மதத் தலைவர்களுக்கும் இடையே கேள்விக்குக் கேள்வி பரிமாற்றம் நடந்தது. இவ்விதம் நடப்பது, முதல் முறையன்று. இதையொத்த பல நிகழ்வுகளை நற்செய்திகள் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு சில:

உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையை இயேசு சொல்வதற்கு முன், நிகழ்ந்த கேள்விக்குக் கேள்வி உரையாடல் நம் நினைவில் நிழலாடுகிறது:

லூக்கா 10: 25-26

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா என்ற வாதத்திலும், கேள்விக்குக் கேள்வி இடம்பெறுகிறது:

மாற்கு 12: 13-16

பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார்.

தொழுகைக் கூடத்தில், கை சூம்பியவரை இயேசு குணமாக்கும் நிகழ்வின் துவக்கத்தில் நற்செய்தியாளர் மத்தேயு கூறுவது இதுதான்:

மத்தேயு 12: 9-11

இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?” என்று கேட்டனர். அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா?” என்றார்.

தங்கள் கேள்வி வலையில் இயேசுவைச் சிக்க வைப்பதற்காக, மதத் தலைவர்கள் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்ததை நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம். ஏனைய நிகழ்வுகளில், கேள்விக்குக் கேள்வியைத் தொடுத்த இயேசு, தொடர்ந்து, அவர்கள் கேட்டக் கேள்விக்குத் தகுந்த விடையைத் தந்ததையும் காணலாம். ஆனால், இன்று நாம் சிந்திக்கும் இந்த நிகழ்வில் மட்டும், மதத் தலைவர்கள் விடுத்தக் கேள்விக்கு மறு கேள்வியை மட்டும் எழுப்பி, அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறார். திருமுழுக்கு யோவானைக் குறித்து தான் எழுப்பியக் கேள்விக்கு சரியான பதில் மதத் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் அதைச் சொல்லாமல் மழுப்பியதால், இயேசுவும் அவர்கள் எழுப்பியக் கேள்விக்கு பதில் தரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

“எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” (மத். 21: 27) என்று சொன்ன இயேசு, அதே மூச்சில், "இரு புதல்வர்கள் உவமை"யைக் கூறுகிறார். அந்த உவமையின் இறுதியில் அவர் மீண்டும் திருமுழுக்கு யோவானைக் குறித்துப் பேசுகிறார். இயேசுவுக்கும், மதத் தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கேள்விக்குக் கேள்வி பரிமாற்றத்திற்கு ஒரு விடையாக இந்த உவமை அமைந்துள்ளது என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

இயேசு கூறிய இந்த உவமைக்கும், உவமையின் இறுதியில் அவர் அளித்த விளக்கத்திற்கும் இப்போது செவி மடுப்போம்:

மத்தேயு 21: 28-32

மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், 'மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, 'நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, 'நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.

மனம் திருந்த விழையாத மதத் தலைவர்களை மனதில் வைத்து இயேசு இந்த உவமையைச் சொல்லியிருந்தாலும், இவ்வுவமைக்குள் இன்னும் பல கருவூலங்களை நாம் கண்டெடுக்க முடியும். அடுத்த வாரம் அந்தத் தேடலில் இறங்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.