2015-04-06 14:42:00

திருத்தந்தை – சூழும் இருளில், கிறிஸ்துவின் ஒளி நம்மில்


ஏப்.06,2015. நம் வாழ்வு இயேசுவின் உயிர்ப்பால் வெற்றியடைந்து, மாற்றம் அடையட்டும் என்று இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இத்திங்கள் நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, இத்திங்கள் நற்செய்திப் பகுதியை (மத்.28,8-15) மையமாக வைத்து அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

திருமுழுக்கு வழியாக நாம் இயேசுவில் உயிர்பெற்றுள்ளோம், அவரில் மரணத்திலிருந்து வாழ்வுக்கும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அன்பின் சுதந்திரத்துக்கும் கடந்து வந்துள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை.

இந்த நற்செய்தியையே நாம் தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு ஒவ்வொரு சூழலிலும் பிறருக்கு வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் உரைத்த திருத்தந்தை, இயேசுவின் உயிர்ப்பில் நாம் கொண்டுள்ள விசுவாசமும், இயேசு நமக்குக் கொணர்ந்துள்ள நம்பிக்கையும் கிறிஸ்தவர்கள் தங்களின் சகோதர சகோதரிகளுக்கு வழங்கக்கூடிய மற்றும் வழங்கவேண்டிய அழகான கொடை என்றும் கூறினார்.   

எனவே கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் சோர்வடைய வேண்டாம் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரையும், கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்று தன்னுடன் சேர்ந்து மூன்று முறை சப்தமாகச் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

மூலைமுடுக்கெல்லாம், வாழ்வின் இருளான நேரங்களில் நற்செய்தியை எடுத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம் வாழ்வின் இருளான நேரங்களில் உயிர்த்த கிறிஸ்துவின் ஒளி நம்மில் ஒளிருகின்றது என்றும் கூறினார்.

பிறர் சிரிக்கும்போது சிரிக்கவும், கண்ணீர் விடும்போது கண்ணீர் விடவும், கவலையாக, நம்பிக்கையை இழக்கும் ஆபத்தில் இருப்பவர்களோடு துணை நிற்கவும், வாழ்வின் பொருளையும் மகிழ்வையும் தேடுவோருக்கு நம் விசுவாச அனுபவத்தைப் பகிரவும் வேண்டும் என அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.