2015-04-06 14:55:00

ஆர்மேனிய இனப்படுகொலையின் நூறாம் ஆண்டு நினைவு திருப்பலி


ஏப்.06,2015. “ஆண்டவரே, மனத்தாராளம் என்ற பண்பில் வாழவும், வரையறையின்றி அன்புகூரவும் எங்களுக்கு உதவும்” என்ற வார்த்தைகளை இத்திங்களன்று தனது டுவிட்டர் செய்தியாக பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஆர்மேனியக் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவு நினைவு திருப்பலியை இம்மாதம் 12ம் தேதி தலைமையேற்று நிறைவேற்றவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்நிகழ்வு குறித்துக் கூறிய திருப்பீடத்துக்கான ஆர்மேனியத் தூதர் Mikayel Minasyan அவர்கள், ஆர்மேனியர்களுக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடத்தப்பட்ட பின்னரும் ஆர்மேனியர்கள் இன்றும் வாழ்கின்றனர், அவர்களுக்கென ஒரு வரலாறு உள்ளது, இது உலக வரலாற்றின் ஓர் அங்கம் என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நினைவு திருப்பலியை நிறைவேற்ற இசைவு தெரிவித்திருப்பது மாபெரும் காரியம் என்றும், இது ஓர் அரசியல் நிகழ்வு அல்ல என்றும் கூறினார் Minasyan.

1915ம் ஆண்டுக்கும் 1923ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒட்டமான் முஸ்லிம் பேரரசு ஆட்சியில் ஏறக்குறைய 15 இலட்சம் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்மேனியர்கள் தப்பிக்கக் கையாண்ட அதே வழிகளையே, ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தற்போது பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார் Minasyan.

ஏப்ரல் 12, ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில் ஆர்மேனியப் புனிதராகிய Narek Gregory அவர்களை, திருஅவையின் மறைவல்லுனராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.