2015-04-05 13:52:00

திருத்தந்தையின் Urbi et Orbi வாழ்த்துச் செய்தி


ஏப்.,05,2015. பகைமையை அன்பு வென்றுள்ளது, சாவை வாழ்வு வெற்றி கண்டுள்ளது, இருளை ஒளி விரட்டியடித்துள்ளது.

நம்மீது கொண்ட அன்பால் இயேசு தன்னையே வெறுமையாக்கி அடிமையின் கோலம் பூண்டு சிலுவைச் சாவை ஏற்றார். அதற்கு கைம்மாறாக, இறைவன் அவரை உயர்த்திப் பிடித்து அகில உலகின் ஆண்டவராக்கினார். தன் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மூலம், வாழ்வு மற்றும் மகிழ்வின் பாதையைக் காட்டினார் இயேசு. அதுவே தாழ்ச்சியின் பாதை. இதுவே மகிமைக்கு இட்டுச் செல்லும் பாதை. கல்லறைக்கு வந்த சீடர்கள் பேதுருவும் யோவானும் கல்லறைக் காலியாக இருப்பதைக் கண்டு, அதனுள் தலை குனிந்து சென்றனர். ஆம். மறையுண்மைக்குள் நுழைய நாமும் தலைகுனிந்து நம்மையேத் தாழ்த்திச் செல்லவேண்டும். எவ்விலை கொடுத்தாகிலும் அனைத்திலும்  முன்வரிசைக்குச் செல்ல இவ்வுலகம் துடிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தின் வழியோ, தாழ்ச்சியின் வழி. அது, ஒருவர் மற்றவருக்கு பணியாற்றும் வழி. இது பலவீனமல்ல, மாறாக, அதுவே பலம். அன்பு, அழகு மற்றும் உண்மையின் வலிமை கொண்டுச் செயல்படுவோம். போரையும் வன்முறைகளையும் தூண்டும் வீண்பெருமைகளைக் கைவிடுவோம். அமைதி மற்றும் மன்னிப்பின் எளிமைநிறை வல்லமையை கைக்கொள்வோம்.

கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுவோர், போர்களால் பாதிக்கப்பட்டிருப்போர் ஆகியோரின் துன்பங்களுக்கு ஒளியூட்டுமாறு உயிர்த்த கிறிஸ்துவிடம் வேண்டுவோம். அமைதிக்காக இறைஞ்சுவோம், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவிற்காக. இங்கு இடம்பெறும் மனிதகுல பேரிடர்களின் முன்னால், அனைத்துலக சமுதாயம் பாராமுகமாய் இருக்காதிருக்க செபிப்போம்.

புனித பூமியின் அமைதிக்காக செபிப்போம். அங்கு அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவக்கப்பட்டு, துன்பங்களும் பிரிவினைகளும் அகலும் வழி பிறக்கட்டும். லிபியாவில் இரத்தம் சிந்தல்களும் வன்முறைகளும் முடிவுக்கு வந்து ஒப்புரவின் பாதை திறக்கப்பட செபிப்போம். அதுபோல், யேமனிலும் அமைதி திரும்புவதற்கென நம் செபங்களை ஒப்புக்கொடுப்போம்.

Lausanneல் இடம்பெற்றுள்ள ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம், மேலும் பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் நிறைந்த உலகை நமக்கு வழங்கட்டும். நைஜீரியா, தென் சூடான், சூடானின் பல்வேறு பகுதிகள், காங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவைகளின் அமைதிக்காகச் செபிப்போம். கடந்த வியாழனன்று, கென்யாவின் Garisssa பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த இளையோரை இப்போது நினைவுகூர்கிறேன். அனைவருக்காகவும் செபிப்பொம். உக்ரைனில் அமைதி திரும்ப உதவுமாறு இறைவனிடம் வேண்டுவோம். குற்றக் கும்பல்களின் புதிய அடிமைத்தன வழிகளால் துன்புறும் மக்களுக்கு அமைதியையும் விடுதலையையும் இறைவனிடம் வேண்டுவோம். போதைப்பொருள் கடத்துவோரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகவும், ஆயுத விற்பனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகிற்காவும் செபிப்போம். பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போர், ஏழைகள், குடியேற்றதாரர்கள், நோயாளிகள், துன்புறுவோர், குழந்தைகள், குறிப்பாக, வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள், இந்நாளில் அழுகுரலை எழுப்பிக்கொண்டிருப்போர், நல்மனதுடையோர் என அனைவரும் ஆண்டவராம் இயேசுவின் 'அமைதி உங்களுக்கு உரித்தாகுக' என்ற வார்த்தைகளுக்கு செவிமடுக்கட்டும். 'அஞ்சாதீர்கள். நான் உயிர்த்தெழுந்துவிட்டேன். நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்' என்கிறார் இயேசு.

இவ்வாறு தன் 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற  ஊர்பி எத் ஓர்பி வாழ்த்துச்செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் கிறிஸ்து உயிர்ப்பு வாழ்த்துக்களை எடுத்துரைத்து, ஊர்பி எத் ஓர்பி ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.