2015-04-04 13:53:00

சிறைக்கைதிகளின் பாதங்களை கழுவினார் திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.,04,2015. புனித வியாழனன்று மாலை, இயேசுவின் இறுதி இரவு உணவு திருப்பலியை உரோம் நகரிலுள்ள ரெபிபியா சிறைச்சாலையில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இச்சிறைச்சாலையின் அருகேயுள்ள பெண்கள் தடுப்புக்காவல் மையத்திலிருந்தும் பெண்கைதிகளும் வந்து இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். இத்திருப்பலியின்போது, இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வை நினைவுகூரும்விதமாக, அங்கிருந்த 12 சிறைக்கைதிகளின் பாதங்களைக் கழுவித் துடைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில் ஆறு பெண் கைதிகளும் அடங்குவர். ஒரு பெண்கைதி தன் குழந்தையையும் தூக்கி வந்திருந்தார். அக்குழந்தையின் கால்களையும் கழுவினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பு குறித்து எடுத்துரைத்தார். ‘இறைவன் ஒருநாளும் தன் அன்பில் சோர்வடைவதில்லை. தன் உயிரையே நமக்குத் தருமளவுக்கு நம்மீது அவர் அன்புகொண்டுள்ளார். நம் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக அன்புகூர்கிறர். அவருடைய அன்புக்கு எல்லையென்பது இல்லை. ஒரு தாய் தன் குழந்தையை மறந்தாலும், இறைவன் நம்மை மறப்பதில்லை. பாதங்களைக் கழுவி சுத்தப்படுத்தல் என்பது அக்காலத்தில் அடிமைகளின் தொழிலாக இருந்தது. கடவுள் நம்மை எவ்வளவுதூரம் அன்புகூர்ந்தார் என்றால், நமக்கு பணிவிடை புரிவதற்காக, நம்மைக் குணப்படுத்துவதற்காக, நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக அவர் தன்னையே அடிமை நிலைக்கு உள்ளாக்கினார். நானும் கடவுளால் தூய்மைப்படுத்தப்படவேண்டும். என்னுடைய குற்றம் குறைகளை இறைவன் கழுவி என்னை தூய்மையாக்க இத்திருப்பலியில் எனக்காக செபியுங்கள். இயேசுவைப்போல் மக்களுடைய பணியில் நானும் அடிமையாய் மாறி சேவையாற்ற உங்கள் செபங்கள் உதவட்டும்'. இவ்வாறு உரோம் நகரின் ரெபிபியா சிறையில் கைதிகளுக்கு மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரிய வியாழனின் பாதம் கழுவும் சடங்கின்போது, திருத்தந்தை தங்கள் பாதங்களைக் கழிவியபோது பல கைதிகள் கண்ணீர்விட்டு அழுதனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.