2015-04-01 16:42:00

மணிலாவில், ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு, சிலுவைப் பாதை


ஏப்,01,2015. புனித வெள்ளியன்று, மணிலாப் பெருநகரின் சாலைகளில் மேற்கொள்ளப்படும் சிலுவை பாதை பக்தி முயற்சியில், விசுவாசிகள் முழுமனதுடன் பங்கேற்குமாறு, மணிலாப் பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பிலிப்பின்ஸ் நாடு சந்தித்து வரும் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அமைதியற்றச் சூழல் ஆகியவற்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சிலுவைப் பாதையில், மக்கள் பங்கேற்று பயன் பெறுமாறு கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இயற்கைப் பேரிடர்களால் மட்டுமல்ல, சமுதாயத்தின் அக்கறையின்மையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள வறியோரை மையப்படுத்தி, நாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

மணிலா உயர் மறைமாவட்டத்தின் ஒருங்கிணைந்த முயற்சியாக, புனித வெள்ளியன்று, மணிலா சாலைகளில், ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு, சிலுவைப் பாதை பக்தி முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.