2015-04-01 16:48:00

போர்ச்சூழலில் சிறார்,மனித சமுதாயத்தின் மீது விழும் சாட்டையடி


ஏப்,01,2015. சிறுவர், சிறுமியரை போர்ச்சூழலில், ஆயுதம் தாங்கும்படி வற்புறுத்தும் கொடுமை, மனித சமுதாயத்தின் மீது விழும் சாட்டையடி என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூயார்க் நகர், ஐ.நா. அவை தலைமை அலுவலகத்தில், "ஆயுதம் தாங்கிய மோதல்களில், குழந்தைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பேசிய, பேராயர் Bernadito Auza அவர்கள், இவ்வாறு கூறினார்.

சட்டங்களுக்கும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கும் புறம்பாக வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்புக்கள், சிறுவர், சிறுமியரை, பாதகமானச் செயல்களுக்குப் பயன்படுத்தும் கொடுமை, வளர்ந்துவருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Auza அவர்கள், இந்தக் கொடுமையை உடனடியாக நிறுத்துவது, அனைத்து நாடுகளின் தார்மீகக் கடமை என்று வலியுறுத்தினார்.

போர் கொடுமைகளிலிருந்து மீட்கப்படும் சிறுவர், சிறுமியரை மீண்டும் சமுதாயத்தின் அங்கமாக்கி, இயல்பு வாழ்வுக்கு அவர்களைக் கொணர்வதும் நம்மீது சுமத்தப்பட்டுள்ள முக்கியக் கடமை என்று, பேராயர் Auza அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.