2015-04-01 15:21:00

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை – புனிதவார கொண்டாட்டங்கள்


ஏப்ரல் 01,2015. புனித வாரத்தில் இருக்கும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மறைக்கல்வி உரை, உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இடம்பெறும் நிகழ்வுகளைக் குறித்ததாக இருந்தது. இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பை உள்ளடக்கிய இப்புனித நாட்களின் கொண்டாட்டம், நாளை துவங்குகிறது என தன் உரையைத் துவக்கினார், திருத்தந்தை.

இந்தப் புனித நாட்கள், இயேசுவின் இறுதி இரவு உணவுத் திருப்பலியுடன் துவங்குகின்றன. இந்த இறுதி இரவு உணவின்போதுதான் இயேசு கிறிஸ்து தன் உடலையும் இரத்தத்தையும் தந்தைக்குக் காணிக்கையாக அளித்ததுடன், தன் சீடர்களுக்கும் உணவாகக் கொடுத்து தன் நினைவாக அதனைத் தொடர்ந்து நிறைவேற்றுமாறும் கட்டளையிட்டார். இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியதையும், நாம் இந்நேரத்தில் நினைவுகூர்கிறோம். இவ்வாறு பாதங்களைக் கழுவியதன் வழியாக, தன் வாழ்வு மற்றும் பாடுகளின் உன்னத நோக்கமே, கடவுளுக்கும் இறைவனுக்கும் பணிபுரிவதற்கே, என்பதை நமக்குக் காட்டினார் இயேசு. அது மட்டுமல்ல, இயேசு நமக்குக் காட்டியுள்ள இந்தப் பணியை நாமும் பின்பற்றி, அவர் நம்மை அன்பு செய்ததுபோல், நாமும் நம் அயலாரை அன்புகூர அழைக்கப்பட்டுள்ளோம்.

புனித வெள்ளியன்று, இயேசுவின் இறப்பு குறித்த மறையுண்மையை நாம் ஆழமாகத் தியானித்து இயேசுவின் சிலுவையை வணங்குகிறோம். பாவமானது, இயேசுவின் தியாகம் வழியாக, அன்பால் வெற்றி காணப்பட்டுள்ளது. இந்த அளப்பரிய அன்பைத்தான், நாம் வாழவும், பிறருக்கு வழங்கவும் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதைக் குறித்து புனித சனிக்கிழமையன்று தியானிக்கின்றோம். அதேவேளை, அன்னைமரியுடன் இணைந்து, திருஅவையாகிய நாம், கிறிஸ்துவின் உயிர்ப்பு கொணரும் உயிர்துடிப்புடைய நம்பிக்கையை உள்ளடக்கிய விசுவாச ஒளியை உயிருள்ளதாக வைத்திருப்போம். உயிர்ப்புக்கு முந்தைய திருவிழிப்பில், அல்லேலுலூயா வாழ்த்தொலி மீண்டும் எதிரொலிக்கும்போது, இயேசுவின் உயிர்ப்பை நாம் கொண்டாட உள்ளோம்.

உயிர்த்த கிறிஸ்துவே, அகில உலகு மற்றும் வரலாற்றின் நிறைவாகவும் மையமாகவும் உள்ளார். இந்நாட்களில் நாம் இயேசுவின் பாடுகளை உற்றுநோக்கிக் கடைபிடிப்பது மட்டுமல்ல, அதன் மறையுண்மைக்குள் உண்மையாகவே நுழைந்து, கிறிஸ்துவின் உள்ளுணர்வுகளை நமதாக்குவோம். இதன்மூலம் நம் உயிர்ப்புக் கொண்டாட்டங்கள் ஆசீர் நிறைந்ததாக இருக்கும்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இறந்ததன் 10ம் ஆண்டு நினைவு நாள் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுவதைக் குறித்தும் எடுத்துரைத்தார். நம்மிடையே என்றும் உயிரோட்டமுள்ளதாக இருக்கும் அவரின் எடுத்துக்காட்டும், சாட்சியமும், இளையோரையும், நோயாளிகளையும், புதுமணத்தம்பதியரையும் வழிநடத்திச் செல்வதாக என மேலும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.