2015-04-01 16:11:00

அமெரிக்க கண்ட உச்சி மாநாட்டில், முதன் முறையாக திருப்பீடம்


ஏப்,01,2015. ஏப்ரல் 10, 11 ஆகியத் தேதிகளில், பானமா நகரில், வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில், திருப்பீடமும் முதன் முறையாகப் பங்கேற்க உள்ளது.

ஏப்ரல் 10, 11 ஆகியத் தேதிகளில், நடைபெறும் இந்த 7வது உச்சி மாநாட்டில், திருப்பீடத்தின் சார்பில், தான் பங்கேற்கப் போவதாக, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Zenit கத்தோலிக்க இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

நடைபெறவிருக்கும் 7வது உச்சி மாநாட்டில், வட, தென் அமெரிக்கக் கண்டங்களின் அனைத்து நாடுகளும் முதன் முறையாகப் பங்கேற்க உள்ளன என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இதுவரை நடைபெற்ற 6 உச்சி மாநாடுகளில் பங்கேற்காத கியூபா நாடு, இம்முறை பங்கேற்க உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், கியூபாவும், அமெரிக்க ஐக்கிய நாடும்  உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் மேற்கொண்ட முயற்சிகளையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

மனிதர்களைப் புறக்கணிக்கும் பொருளாதாரம், புலம் பெயரும் மக்கள், குறிப்பாக, புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாகும் குழந்தைகள், ஊழல்களில் சிக்கியுள்ள அரசியல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசிவரும் கருத்துக்கள், அரசுத் தலைவர்கள் பலரது கவனத்தை, சரியான வகையில் ஈர்த்துள்ளன என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார். 

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.