2015-03-31 16:24:00

திருத்தந்தை பிரான்சிஸ் உலகில் 4வது மிகப் பெரியத் தலைவர்


மார்ச்,31,2015. “ஒப்புரவு அருளடையாளம், கடவுளின் கனிவின்  அருளடையாளம்,  இது அவர் நம்மை அரவணைத்துக்கொள்ளும் வழியாகும்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உலகில் நான்காவது மிகப் பெரியத் தலைவராக அறிவித்துள்ளது Fortune இதழ்.

வணிகம், அரசு நிர்வாகம், மனித நேயம் போன்ற பண்புகளின் அடிப்படையில் உலகின் ஐம்பது மிகப் பெரியத் தலைவர்களைப் பட்டியலிட்டுள்ள புகழ்பெற்ற Fortune வணிக இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நான்காவது இடத்தில் வைத்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முதலிடத்தில் வைத்த இந்த இதழ், இவ்வாண்டும் திருத்தந்தை பெயரைக் குறிப்பிட்டுள்ளது குறித்த கருத்து தெரிவித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, மனஉறுதி, சீர்திருத்தத்திற்கான அர்ப்பணம் போன்றவை கடந்த ஆண்டில் மிகச் சிறந்த முறையில் அசாதரணமாக இருந்தன, எனவே இவ்வாண்டும் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான Tim Cook அவர்கள், ஸ்டீவ் ஜோப்ஸ் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் வெளிப்படுத்திய சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி Tim Cook அவர்களை இவ்வாண்டு முதலிடத்தில் வைத்துள்ளதாக Fortune இதழ் கூறியது.

உலகின் ஐம்பது மிகப் பெரியத் தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இடம்பெற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.