2015-03-30 15:39:00

வாரம் ஓர் அலசல் – தலைமுறை வாழ்த்த வாழ்வோம்


மார்ச்,30,2015. அன்பு நேயர்களே, மார்ச் மாதம் விரைவாகக் கடந்து, அறிவாளிகள் தினத்துடன் ஏப்ரலும் தொடங்கவிருக்கிறது. ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாச்சே, வருகிற புதனன்று ஓரிருவரையாவது முட்டாளாக்க வேண்டும், ஆனால் என்னை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்று இப்பொழுதே சிந்தித்துக் கொண்டிருக்கிறேனே, அது எப்படி ஏப்ரல் முதல் நாள் அறிவாளிகள் தினமாகும் என்று நினைக்கின்றீர்களா? ஏப்ரல் முதல் நாளில் குறைந்தது ஒருவராவது நாம் அறிவாளி அல்ல என்பதை உணர வைக்கின்றார்கள்தானே!. நாம் அன்றாடம் ஆற்றும் அறிவற்ற செயல்களைக் கண்டுபிடிக்கும்போது நாம் அறிவாளிகள் இல்லையா? விடயங்களை அறிந்தவர்களை அறிஞர் என்பார்கள். எனவே சில நேரங்களில் நானும் ஒரு முட்டாள் என்பதை அறிந்து கொள்ளும்போது, நாமும் ஓர் அறிஞராக வாய்ப்புக் கிட்டுகிறது. அமெரிக்க எழுத்தாளரும், நகைச்சுவையாளருமான Mark Twain அவர்கள் அன்றே சொன்னார் - ஏப்ரல் முதல் நாள், ஆண்டின் மற்ற 364 நாள்களில் நாம் எப்படி இருந்தோம் என்பதை நமக்கு நினைவுபடுத்தும் நாள் என்று. கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல, அறிவற்ற ஒருவர், தன்னைவிட இன்னும் அதிகமாக அறிவற்றுச் செயல்படும் மற்றொருவரை அடையாளம் காண்பதற்கு உதவும் இந்த நாளை அறிவாளிகள் தினம் என்று அழைக்கலாம் அல்லவா! அறிவை ஆக்கத்திற்குப் பயன்படுத்தும்போது நாம் எல்லாருமே அறிவாளிகளே.

ஏப்ரல் முதல் தேதிக்கு ஒரு வரலாறு உள்ளது. விக்கிப்பீடியாவில் இந்த வரலாறு குறித்து வாசித்தபோது சில சுவையான தகவல்கள் கிடைத்தன. பழங்காலத்தில்  உரோமையர்களும், இந்துக்களும், யூதர்களும் ஏப்ரல் முதல் தேதிவாக்கில் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். மத்திய காலத்தில் பல ஐரோப்பிய நகரங்களில், இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்ட மார்ச் 25ம் தேதியன்று புத்தாண்டு சிறப்பிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு அரசர் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் 25ம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்குப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் முதல் தேதி பெரிய விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவடைந்துள்ளது. 1562ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டு நாள்காட்டி முறையை மாற்றி, புதிய கிரகோரியன் நாள்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி சனவரி முதல் நாள்தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய நாடுகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், சனவரி முதல் நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றன. புதிய வழக்கத்தை ஏற்றுக்கொண்டு சனவரி முதல் நாள் புத்தாண்டு கொண்டாடிய மக்கள், பழைய முறைப்படி ஏப்ரல் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை, ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். முட்டாள்கள் தினத்துக்கு இதுதான் ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது. அதோடு சனவரி முதல் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளையும் இவர்கள் அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை போன்றவற்றை நிரப்பி ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான, ஆனால் நகைக்கும்படியான செயலாகச் செய்து மகிழ்ந்தனர். பிரான்சில் சிறார் காகிதத்தில் மீன் போன்று செய்து தங்கள் நண்பர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்தனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற சிறாரைப் பார்க்கும் மற்ற சிறார் “ஏப்ரல் மீன்” என்று அழைத்து கிண்டல் செய்தனர். இந்த ஏப்ரல் முதல் நாளுக்கு இன்னுமோர் சுவையான தகவல் உள்ளது. 1466ம் ஆண்டு அரசர் பிலிப்பை அவரது அரசவை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று அரசரையே முட்டாளாக்கிய தினம் ஏப்ரல் முதல் நாள் என்றும் கூறப்படுகிறது. காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு ஓடும் பரபரப்பான இக்காலத்தில் ஏப்ரல் முதல் நாளை நினைப்பதற்கும், மற்றவரை முட்டாளாக்கிச் சிரிக்கவும் நேரம் காலம் ஏது என்று, அன்பர்களே நீங்கள் சொல்வதும் கேட்கிறது. உண்மைதான்.

ஆனால் பல ஏமாற்றுப் பேர்வழிகளின் ஆசை வார்த்தையில் பலர் முட்டாளாகி சொத்தையும், சுகத்தையும், மன அமைதியையும் இழந்து துன்புறுகின்றனர். குறிப்பாக, இணையதளம், முகநூல், மின்னஞ்சல் என பலவழிகளில் ஏமாற்றப்படுகின்றனர். பென்சில், பேனா, சாவிகள், கழிப்பறையின் நறுமணப் பாட்டில்கள், பெரிய துணிக் கடைகளில் ஆடைகளை அணிந்து பார்க்கும் இடங்கள் என நம்பமுடியாத இடங்களில், நம்ப முடியாத பொருள்களில், கண்ணுக்குத் தெரியாத நவீன புகைப்பட கருவிகளைப் பொருத்தி பலரின் வாழ்வைப் பாழாக்குகின்றனர். இதனால் பல குடும்பப் பெண்களின் திருமண வாழ்வு முறிந்துபோயுள்ளது. காதல் என்ற பெயரில் இளம்பெண்களிடம் பழகி, அந்தரங்களை ஒளிப்பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன; பணம் கொடுக்க முடியாத இளம் பெண்கள் தவறான பாதைக்குச் சென்று சீரழிவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அண்மைக் காலமாக, மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., இணையத்தளங்கள் மூலமாகவும் சிலர் ஏப்ரல் முதல் தேதியன்று வதந்திகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவைப்படுகின்றது. 

சிரியாவில் புகைப்பட கருவியைப் பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய ஒரு சிறுமியின் புகைப்படம் இன்று உலகையே உலுக்கியுள்ளது. சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப்பழகிய இச்சிறுமி, புகைப்படம் எடுக்க கேமராவைச் சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை நாடியா அபு ஷபான் என்ற புகைப்படக் கலைஞர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிஞ்சு முகத்தில் பயம். கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள 15 வயதுச் சிறுமி ஒருவர், “ஒரே நாளில் என்னை அடுத்தடுத்து 15 பேருக்குத் திருமணம் செய்து வைத்து, விவாகரத்து செய்ய வைத்து பாலியல் ரீதியாக என்னைச் சித்தரவதை செய்தார்கள்”என்று கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார். இன்றையப் பயங்கரவாத நிலையின் வெளிப்பாடு இது. பிரபல நிறுவனங்கள்கூட ஏப்ரல் முதல் தேதியன்று மக்களை முட்டாளாக்கும் வேலையில் சில சமயம் ஈடுபடுவதுண்டு. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும்கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் முதல் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டது. “செவ்வாய் கோளத்தில் தண்ணீர்” என்று தடித்த எழுத்தில் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் எழுதி வைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அது கேலிக்கு என்றது நாசா. ஆனால் சில நேரங்களில் ஏப்ரல் முதல் தேதியன்று சிலர் வெளியிடும் சிரிப்புச் செய்திகள் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. 2003ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை கொன்றுவிட்டார்கள் என சில இணையதளங்கள் பொய்யான செய்தியை பரப்பியதால் தென்கொரியப் பங்குச்சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 விழுக்காடு சரிந்தது. ஆயினும், ஏப்ரல் முதல் நாள் வரலாற்றில் பல நல்ல விடயங்களின் துவக்க நாளாகவும் இருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கமாக ஏப்ரல் முதல் நாள் அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் இத்தினம் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. 1935ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது. 2004ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தின் மின்னஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. இப்படி இன்னும் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளன. எனவே இந்த ஏப்ரல் முதல் நாளை பல நல்ல நாள்களின் தினமாக, அறிவாளிகளின் தினமாக நாம் நினைவுகூரலாம். அதேநேரம் இன்றைய உலகில் சில விஷமிகளின் செயல்களால் நாம் ஏமாற்றப்பட்டுவிடாமல் விழிப்போடு இருக்க நம்மைத் தூண்டும் ஒரு நாளாகவும் இதனை நோக்கலாம். யார் பிறரைச் சிறிதளவுகூட அவமதிக்கவில்லையோ, அவரே சிறந்த அறிவாளி.

கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீஸ் அவர்களுக்கு ஏதென்ஸ் சிறையில் நஞ்சு கொடுக்கப்படுவதற்குமுன், Delphiயிலிருந்த பெண் குரு, சாக்ரடீஸ் அவர்களை, முழு உலகிலும் மிகுந்த அறிவு கொண்டவர் என்று தெய்வ வாக்காகச் சொன்னார். இதை சாக்ரடீஸ் அவர்களிடம் மக்கள் மகிழ்வோடு சொன்னபோது, நீங்கள் டெல்பிக்குத் திரும்பிச் சென்று, இதுநாள் வரை அது சரியாகச் சொல்லியிருந்தாலும், இம்முறை அது தவறு செய்து விட்டது என்று கூறுங்கள். ஏனெனில் எனக்கு உண்மையில் ஒன்றும் தெரியாது'' என்று சொன்னார். அவர்களும் திரும்பிச் சென்று தெய்வ வாக்கிடம், சாக்ரடீஸ் இதை மறுக்கிறார் என்றனர். அப்போது அந்தத் தெய்வ வாக்கு, இங்கேதான் இந்த நிகழ்வின் அழகே இருக்கிறது. அதனால்தான் அவர் உலகில் தலை சிறந்த அறிவாளியாக இருக்கிறார். இதில் முரண்பாடு எதுவுமில்லை என்று கூறியது.

நிறைகுடம் ததும்பாது. நாமும் இந்த அறிவாளிகளின் அடக்கமான, பணிவான வாழ்வைப் பின்பற்றலாம். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான Tim Cook அவர்கள், தனது 78.50 கோடி டாலர் சொத்தை, தனது 10 வயது உறவுக்கார சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லுமாறு திட்டமிட்டுள்ளார், இவர் திருமணமாகாதவர் என்று Fortune இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. Tim Cook அவர்கள், தான் அளிக்கும் நன்கொடை விவரத்தை தனது இணையதளத்தில் வெளியிடுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அன்பர்களே, நாம் இவ்வுலகில் வாழ்வது ஒருமுறைதான். அவ்வாழ்வை தலைமுறைகள் நன்றாக வாழ்த்துமாறு வாழ்ந்து காட்டுவோம். ஏப்ரல் முதல் தேதி நம்மைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று உணருவோம். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய இந்தப் பயணத்தில் அவரின் அருளால் நிறைக்கப்படுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.