2015-03-30 15:59:00

திருத்தந்தை : புனித வாரத்தில் தாழ்ச்சியுடன் நடைபோடுவோம்


மார்ச்,30,2015. இயேசுவின் எளிமையையும் தாழ்ச்சியையும் ஆழ்ந்து தியானித்து, அத‌ற்கு எடுத்துக்காட்டாக‌, இப்புனித‌ வார‌த்தில் செய‌ல்ப‌டுவோம் என‌ இஞ்ஞாயிற‌ன்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்து ஞாயிற‌ன்று உரோம் ந‌க‌ரின் தூய‌ பேதுரு பேரால‌ய‌ வ‌ளாக‌த்தில் திருப்ப‌லி நிறைவேற்றி ம‌றையுரை வ‌ழ‌ங்கிய‌ திருத்தந்தை பிரான்சிஸ் அவ‌ர்க‌ள், த‌ற்பெருமை, வெளி ஆட‌ம்ப‌ர‌ம் போன்ற உல‌க‌ப்போக்குக‌ளைக் கைவிட்டு, இயேசுவின் தாழ்ச்சியைப் பின்பற்றவேண்டும் என்றார்.

கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்குரிய உண்மையான‌ வாழ்வுப்பாதை தாழ்ச்சியே என்ப‌தை இயேசுவின் பாடுக‌ள் ந‌ம‌க்குக் காட்டுகின்ற‌ன‌ என‌ த‌ன் ம‌றையுரையில் உரைத்த‌ திருத்த‌ந்தை, தாழ்ச்சி என்ப‌து இறைவ‌னின் பாதை, அவ‌ர் த‌ன் ம‌க்க‌ளுட‌ன் இணைந்து நட‌க்க‌ தேர்ந்து கொண்ட‌ பாதை, என்றார்.

இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையை பின்பற்றுவதன் வழியே இவ்வாரம் நமக்கு புனிதமானதாக அமைய முடியும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாழ்ச்சி என்பது பிறருக்கான சேவையையும் குறிக்கிறது, ஏனெனில் இறைவனுக்கு நம் இதயத்தில் இடமளிக்க நம்மையே  நாம் வெறுமையாக்க வேண்டியுள்ளது, அவ்வாறு வெறுமையாக்குவது தாழ்ச்சியைக் குறிக்கும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு எதிரானப் பாதைகளாக உலகப் போக்குகளையும் சுட்டிக்காட்டினார்.

நாற்பது நாட்கள் பாலைவனத்தில்  செபத்தில் ஈடுபட்ட இயேசுவுக்கு தீயோன் முன்வைத்த வழிகளே உலகப்போக்குகளின் பாதை என்பதை உணரும் நாம், இயேசுவின் துணையுடன் ஒவ்வொரு நாளும் இச்சோதனைகளை வெல்லவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

நம்மையே வெறுமையாக்கி, தாழ்ச்சியின் மகிமை உணர்ந்து, பிறருக்கான சேவையில் ஈடுபாடு கொள்ளவேண்டிய நாம், நோயுற்ற நம் உறவினர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், வீடற்றோர், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்புறுவோர் ஆகியோரை இவ்வேளையில் நினைவுக் கூர்வோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.