2015-03-30 15:05:00

கடுகு சிறுத்தாலும் – நட்பின் இலக்கணம்


இரு நண்பர்கள் பயணம் செய்த கப்பல் ஒன்று ஒரு தீவு அருகில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரு நண்பர்களைத் தவிர அக்கப்பலில் பயணம் செய்த எல்லாரும் இறந்து விட்டனர். இவ்விருவரும் நீந்தி அத்தீவின் கரையை அடைந்தனர். ஆனால் அங்கு கண்ணுக்கு எட்டின தூரம் வரை மனிதர் நடமாட்டம் இல்லை. இருவருக்கும் கடும் பசி. அப்போது அவ்விருவரில் ஒருவர், நான் மேற்குப் பக்கம் சென்று ஏதாவது உணவு கிடைக்குமா என பார்த்து வருகிறேன். நீ எங்கேயும் போகாமல் இங்கேயே இரு எனச் சொல்லிச் சென்றார். சிறிது நேரத்தில் மற்றொரு நண்பர் கிழக்குப் பக்கமாக சிறிது தூரம் சென்றுவிட்டு ஒன்றும் கிடைக்காமல் இருந்த இடத்துக்கே வந்துவிட்டார். பசியினால் மிகவும் களைப்படைந்து கடவுளிடம் உணவுக்காக உருக்கமாக மன்றாடினார். செபித்து கண்விழித்தபோது அவர் முன்னால் நிறைய பழங்கள் இருந்தன. மகிழ்வோடு சாப்பிட்டுப் பசியைப் போக்கினார் அவர். பின்னர் தனியாக இங்கே இருக்கிறோமே ஒரு துணை இருந்தால் நல்லாயிருக்குமே என்று செபித்தார். ஓர் அழகிய பெண் அவர்முன்னே வந்தார். மனிதர் வாழாத இந்தத் தீவில் இப்பெண்ணோடு இருந்து என்ன செய்ய, வேறு பக்கம் செல்லலாமே என்று நினைக்க கடலில் ஒரு கப்பல் தென்பட்டது. சரி போகலாம் என்று அந்தப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு கப்பலுக்குப் போனார் அவர். அப்போது, உன் நண்பனை விட்டுவிட்டுச் செல்கிறாயே என்ற ஒரு குரலைக் கேட்டார். அவன் ராசியில்லாதவன், அவனோடு வந்து கப்பலும் உடைந்துவிட்டது, உணவும் கிடைக்கல, உணவு தேடிப் போனவன் இதுவரை வரலை என்று பதில் சொன்னார். அப்போது அந்தக் குரல், அங்கே உன் நண்பன், கடவுளே என் நண்பன் கேட்பதையெல்லாம் கொடு என்று உனக்காகச் செபித்துக்கொண்டே உணவுக்காக அலைந்து கொண்டிருக்கிறான் என்று சொன்னது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.