2015-03-28 15:46:00

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்து ஞாயிறு நிகழ்வுகள்


மார்ச்,28,2015. இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஒலிவ மரக்கிளைகளையும் குருத்தோலைகளையும் ஆசீர்வதித்து,   குருத்து ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் ஆகியோருடன் பவனியாகச் சென்று குருத்து ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் குருத்தோலைப் பவனியில் பங்குபெறும் கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் என அனைவருக்கும் வழங்குவதற்கென கைவேலைப்பாடுகள் நிறைந்த குருத்தோலைகளை இத்தாலியின் சன்ரேமோ நகர் வழங்குகிறது.

குருத்து ஞாயிறு திருவழிபாட்டுக்கென குருத்தோலைகளை திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கும் பழக்கம், 2003ம் ஆண்டில் சன்ரேமோ குருத்தோலை ஆய்வு  மற்றும் சமூக மையத்தால் தொடங்கப்பட்டது. திருத்தந்தைக்கு வழங்கப்படும் கைவண்ண குருத்தோலை மூவொரு கடவுளைக் குறிக்கும் விதத்தில்  தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்புனித நாளில் வத்திக்கான் வளாகத்திலும் மற்ற இடங்களிலும் வைக்கப்படும் ஒலிவ மரங்களையும், விசுவாசிகளுக்கு விநியோகிக்கப்படும் ஒலிவக் கிளைகளையும் தென் இத்தாலியின் Puglia மாநிலத்தின் Cerignola-Ascoli Satriano மறைமாவட்டம் வழங்குகிறது. இது அம்மறைமாவட்ட ஆயர் Felice di Molfetta அவர்களின் முயற்சியாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.