2015-03-26 16:21:00

மனித உயிர்களுக்கு உரிய மாண்பை வழங்குவதே முன்னேற்றம்


மார்ச்,26,2015. பொருளாதாரம், சமுதாயம், சுற்றுச்சூழல் முன்னேற்றம் என்ற மூன்று தூண்களின் மேல், பாதுகாக்கப்படக்கூடிய முன்னேற்ற இலக்குகள் (Sustainable Development Goals - SDGs) கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாதுகாக்கப்படக்கூடிய முன்னேற்ற இலக்குகள் என்ற மையக்கருத்துடன், நியூயார்க் நகரில் மார்ச் 24, இச்செவ்வாயன்று நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Bernadito Auza அவர்கள், உலக அரசுகளிடையே, வெளிப்படையான கூட்டுறவு முயற்சிகள் இருப்பது, உலகிற்கு நன்மை தரும் என்று கூறினார்.

உலகில் பரவிவரும் வறுமையை ஒழிப்பதும், மனித உயிர்களுக்கு உரிய மாண்பை வழங்குவதும் முன்னேற்றத்தின் முக்கியக் கூறுகளாக அமையவேண்டும் என்று பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.

சுயநலத்தால் தூண்டப்படும் அரசுகள், தங்கள் முடிவுகளை, மறைமுகமாக, வறிய நாடுகள் மீது திணிப்பதைத் தவிர்த்து, அனைத்து அரசுகளும் ஒளிவு மறைவின்றி மனித சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபடுவதையே திருப்பீடம் எப்போதும் விரும்புகிறது என்று பேராயர் Auza அவர்கள் தன் உரையில் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.