2015-03-26 15:56:00

குளிர்ந்துபோன கருத்தியல்கள் மகிழ்வைத் தருவதில்லை-திருத்தந்தை


மார்ச்,26,2015. குளிர்ந்து, உறைந்துபோன கருத்தியல்கள் உண்மையான மகிழ்வைத் தருவதில்லை; மாறாக, இயேசுவைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையே மகிழ்வைத் தருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையாற்றினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை, வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கு இறைவன் வழங்கிய உறுதி மொழிகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.

தானும், மனைவி சாராவும் வயதில் முதிர்ந்த நிலையில் இருந்தாலும், இறைவன் தன்னை எண்ணற்ற நாடுகளுக்குத் தந்தையாக்குவதாகக் கூறிய உறுதிமொழியை, ஆபிரகாம் நம்பியதால், அவர் மகிழ்ந்தார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் மறைநூல் வல்லுனர்கள், இறைவனையும், இயேசுவையும் சந்திப்பதற்குப் பதில், தங்கள் கருத்தியல்களில் கட்டுண்டு போனதால், அவர்களால் உண்மையான மகிழ்வைக் காணமுடியவில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

மறைநூல் வல்லுனர்கள், இயேசுவை மடக்குவதில் குறியாய் இருந்தபோது, சிறுமைத்தனமான மகிழ்வை அடைந்திருக்கலாம்; ஆனால், உண்மை மகிழ்வை அவர்கள் தொலைத்துவிட்டனர் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

மேலும், "தங்கள் கிறிஸ்தவ வாழ்வின் வழியாக, மனித சமுதாயத்தில் புளிப்புமாவாகச் செயல்பட, பொதுநிலையினர் அழைக்கப்பட்டுள்ளனர்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.