2015-03-25 14:50:00

அமைதி ஆர்வலர்கள் : 1976ல் நொபெல் அமைதி விருது-பாகம் 2


மார்ச்,25,2015.  வட அயர்லாந்தில் வேரூன்றியிருந்த, ஆழமான இன மற்றும் அரசியல் சண்டை முடிவுக்கு வருவதற்கு Mairead Corrigan Maguire அவர்கள் ஆற்றிய அசாதாரண செயல்களுக்காக 1976ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. Mairead Maguire என அறியப்படும் இவர், தனது நாட்டு மற்றோர் அமைதி ஆர்வலரான Betty Williams அவர்களுடன் இந்த விருதைப் பகிர்ந்து கொண்டார். அச்சமயத்தில் இளம் வயதில் இவ்விருதைப் பெற்றவராகப் பாராட்டப்பட்டார் Mairead Maguire. அப்போது அவருக்கு வயது 32. வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் கத்தோலிக்க குடும்பத்தில் 1944ம் ஆண்டு சனவரி 27ம் தேதி பிறந்த Mairead அவர்களுக்கு ஐந்து சகோதரிகள் மற்றும் இரு சகோதரர்கள். ஆரம்பக் கல்வியை முடித்த இவர், தனது படிப்பைத் தொடருவதற்காக பெல்பாஸ்ட் கத்தோலிக்க மையத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலை செய்து பணம் சேர்த்தார். பின்னர் அப்பணத்தைக் கொண்டு கல்லூரி படிப்பை முடித்தார். அச்சமயத்தில் மாலை நேரங்களில் அன்னைமரியா பக்த சபையில் ஆர்வமுடன் ஈடுபட்டார். வார ஓய்வு நாள்களில் சிறாருடன் நேரத்தைச் செலவழித்தார் மற்றும் Long Kesh சிறைக்குச் சென்று கைதிகளைச் சந்தித்து வந்தார். இவர் தனது 21வது வயதில் Guinness திராட்சை இரசம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து 1976ம் ஆண்டு டிசம்பர் வரை வேலை செய்தார்.

Mairead Maguire அவர்கள், வட அயர்லாந்து அமைதி இயக்கத்தில் உயிர்த்துடிப்புடன் இயங்கியதற்கு ஒரு பின்னணி உள்ளது. அமைதி ஆர்வலர் பெட்டி வில்லியம்ஸ் பற்றிக் கூறியபோது இந்தப் பின்னணி பற்றி விளக்கினோம். 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பெல்பாஸ்ட்  நகரின் Andersonstown சாலை வழியாக, IRA புரட்சிப்படையைச் சேர்ந்த Danny Lennon என்பவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் துப்பாக்கிகள் இருந்ததாகவும், அதிலிருந்த தளபதி Chillingworth தங்களைச் சுடுவதற்குக் குறிவைத்ததாகவும் பிரித்தானியப் படைவீரர்கள் சந்தேகப்பட்டு அவ்வாகனத்தின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடிய அந்த வாகனம், Finaghy சாலையின் நடைபாதையில் தங்களின் தாய் Anne Maguireடன் சென்றுகொண்டிருந்த 8 வயது ஜோன், 6 வார ஆன்ட்ரூ, 2 வயது ஜான் Maguire ஆகியோர்மீது மோதியது. இதில் ஜோனும் ஆன்ட்ரூவும் அந்த இடத்திலேயே இறந்தனர். ஜான் அடுத்த நாள் இறந்தார். இதைப் பார்த்த அச்சிறாரின் தாயும் மனநலம் பாதிக்கப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வாகன ஓட்டுனர் Lennonம் கொல்லப்பட்டார். Chillingworthம் படுகாயமடைந்தார். அச்சமயம் அவ்வழியே தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெட்டி வில்லியம்ஸ் அவர்களும், துப்பாக்கிச் சூடு சப்தத்தைக் கேட்டு அவ்விடத்துக்கு விரைந்தார். மரணமடைந்த இந்த மூன்று சிறாரும் Mairead Maguire அவர்களின் தங்கையின் பிள்ளைகள். இந்த மூன்று சிறாரின் மரணமே, Mairead, Betty Williams, Ciaran McKeown ஆகிய மூவரும் சேர்ந்து வட அயர்லாந்து பெண்கள் அமைதி இயக்கத்தைத் தொடங்கக் காரணமானது. பின்னாளில் இந்த இயக்கம், அமைதி மக்கள் சமூகமாக மாறியது.

அதோடு, இச்சிறாரின் மரணம், அயர்லாந்து அன்னையரையும், மற்றவர்களையும் இணைத்து வட அயர்லாந்து முழுவதும் சாலைகளில் மாபெரும் அமைதிப் பேரணிகளை நடத்தவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் காரணமானது. வட அயர்லாந்தில் அமைதிக்காக பொதுப்படையாக வலியுறுத்தப்பட்ட முதல் பெரிய நடவடிக்கை இதுவே. மேலும், துன்பங்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இது அறிவிக்கப்பட்டது. முதலில் பத்தாயிரம், பின்னர் 35 ஆயிரம் என பல்லாயிரக்கணக்கான மக்களால், பெரும்பாலும் பெண்களால் வட அயர்லாந்தில் பல இடங்களில் இந்த அமைதி ஊர்வலங்கள் நடந்தபோது வன்முறையின் அளவு எழுபது விழுக்காடு குறைந்திருந்தது. இவர்கள் அமைதி ஊர்வலங்கள் மேற்கொண்டபோது IRA புரட்சிப் படையினரால் தாக்கப்பட்டனர். பெல்பாஸ்ட் சிறையிலுள்ள கைதிகளைக் குடும்பங்கள் சென்று சந்திப்பதற்கு உதவியாக இலவச பேருந்து வசதிகளையும் இந்த அமைப்பினர் செய்து கொடுத்தனர். வன்முறையால் அல்ல, கல்வி மூலமே வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டு செயல்படும் இவர்களது இயக்கம் அமைதியால் அமைதி என்ற இதழையும் நடத்தி வருகிறது.

தற்போது அமைதி இயக்கத்தின் கவுரவத் தலைவராகப் பணியாற்றும் Mairead அவர்கள், இந்த நொபெல் அமைதி விருதைப் பெற்றதிலிருந்து வட அயர்லாந்திலும், உலகெங்கிலும் அமைதியை ஊக்குவிப்பதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். வட அயர்லாந்தில் பல்வேறு அரசியல், திருஅவை மற்றும் பல்சமயத் தலைவர்களுடன் இணைந்து உரையாடலையும் வன்முறையற்ற வாழ்வையும், பிளவுண்டு வாழும் சமூகங்கள் மத்தியில் சமத்துவத்தையும் ஊக்குவிக்க உழைத்து வருகிறார். அயர்லாந்து பொருளாதாரப் பள்ளியில் பட்டம் பெற்றுள்ள Mairead அவர்கள், பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும், பல்சமய நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார். இவர் அனைத்துலக அமைதி அவையின் ஆலோசகராகவும், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபையின் இறையியல் கல்லூரி மற்றும், வட அயர்லாந்து ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி அவையின் புரவலராகவும் உள்ளார். “அமைதியின் கண்ணோட்டம் : வட அயர்லாந்தில் விசுவாசமும் நம்பிக்கையும்”(The Vision of Peace: Faith and Hope in Northern Ireland) என்ற நூலின் ஆசிரியரும் இவர். இந்த நூல் அண்மையில் மறுபதிப்பு செய்யப்பட்டது.

Mairead Maguire அவர்கள் 1976ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது தவிர, வேறுபல விருதுகளையும் பெற்றுள்ளார். மத்திய கிழக்குப் பகுதி, குறிப்பாக, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகள் குறித்த அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பிரித்தானியக் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் Mairead. இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்ரமிப்புக்கு எதிராகவும் இவர் குரல் கொடுத்து வருகிறார். உலகில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் Mairead Maguire.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.