2015-03-24 15:36:00

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ அவர்களுக்கு கத்தோலிக்கர் அஞ்சலி


மார்ச்,24,2015. சிங்கப்பூர் உலகின் பார்வையில் ஒன்றுமில்லாததாகக் கணிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில், லீ க்வான் யூ என்ற மாபெரும் தலைவரைக் கொண்டிருந்ததற்கு, சிங்கப்பூர் மக்களாகிய நாங்கள் அனைவரும் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள் கூறினார்.

சிங்கப்பூரில் 31 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்து, அந்த நகர நாட்டை உலக அளவில் வியப்பூட்டும் நிதி மையமாகவும், இப்புவியில் செல்வமிக்க நாடுகளில் ஒன்றாகவும் உயர்த்திய மறைந்த முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ அவர்களின் மறைவுக்கு கத்தோலிக்கத் திருஅவையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் பேராயர் Goh.

நேர்மை, நிதானம், கூறுபடாநிலை, தன்னலமில்லா அன்பு, பிள்ளைக்குரிய பக்தி, அர்ப்பணிப்பு, கடமையுணர்வு ஆகியவற்றின்மீது இவர் நாட்டைக் கட்டியெழுப்பிய மரபுரிமையை அந்நாட்டினராகிய நாங்கள் பாதுகாத்து அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் பேராயர் Goh.

வருகிற வெள்ளியன்று (மார்ச் 27) சிங்கப்பூர் புனித யோசோப் ஆலயத்தில் லீ அவர்களின் ஆன்ம சாந்திக்காக திருப்பலி நிறைவேற்றவுள்ள பேராயர் Goh அவர்கள், மற்ற மக்களுடன் சேர்ந்து அந்நாட்டின் கத்தோலிக்கரும் தங்களின் பெருந்தலைவரின் மறைவுக்காக வருந்துவதாகவும் கூறினார்.

சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ அவர்கள் தனது 91வது வயதில் மார்ச் 23, கடந்த திங்கள் அதிகாலை 3.18 மணியளவில் உயிர்துறந்தார். லீயின் மறைவையொட்டி சிங்கப்பூர் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, மக்கள் செயல் கட்சியைத் தொடங்கி அந்நாட்டின் முதல் பிரதமர் ஆனார். 1959ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பிரித்தானியரிடமிருந்து அந்நாடு முழு அதிகாரத்தை பெற்றது. சிங்கப்பூர் என்ற நாட்டை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ', பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.

திறமையான, பொறுப்பான, நீடித்த முற்போக்கான சிந்தனையுடய ஊழலைத் தடுக்கும் ஆட்சியாக அவரது ஆட்சிக் காலம் இருந்ததால் மக்கள் மத்தியில் அவர் சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். சுத்தமே முதல் நோக்கமாகக் கொண்ட அவர், ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை அழைத்து, அவர்களுடன் இணைந்து, சிங்கப்பூரை சுத்தம் செய்தார். இதற்குப் பின்னர், சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள், அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.