2015-03-24 15:00:00

கல்வாரியில் இயேசுவின் இறுதி வார்த்தைகள் - பகுதி - 6


இயேசு  சிலுவையில் சொன்ன இறுதி வாக்கியங்களை நாம் இந்த தவக்காலத்தின் விவிலியத் தேடல்களில் சிந்தித்து வருகிறோம். இன்றைய விவிலியத் தேடலுக்கு நாம் எடுத்துக் கொள்வது: "தாகமாயிருக்கிறது" (யோவான் 19: 28) என்ற இயேசுவின் கூற்று. தாகத்தைப் பற்றி இந்த வாரத் தேடலில் நாம் சிந்திக்க வந்திருப்பது, பொருத்தமாக உள்ளது. இப்படி பொருந்தி வர வேண்டுமென நான் எவ்விதத்திலும் திட்டமிடவில்லை. தானாகவே வந்தமைந்த இந்த பொருத்தத்திற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

என்ன பொருத்தம் இது? இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 22, நாம் உலக தண்ணீர் நாளைச் சிறப்பித்தோம். இன்று தாகத்தைப் பற்றி பேசுகிறோம். தாகம், தண்ணீர் இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை, பிரிக்க முடியாதவை.

கல்வாரியில் இயேசு கொண்ட தாகத்தை முதலில் சிந்திப்போம். கல்வாரியில் நிகழ்ந்ததாய் நான்கு நற்செய்திகளும் சொல்பவற்றைச் சேர்த்துப் பார்த்தால், கல்வாரியில், இயேசுவுக்கு, இருமுறை பானங்கள் கொடுக்கப்பட்டதென நாம் ஊகிக்கலாம். முதல் முறை இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பானத்தை அவர் குடிக்க மறுத்தார். இரண்டாம் முறை அவரே தன் தாகத்தை எடுத்துச் சொன்னார். பாரமான சிலுவையைச் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து, விழுந்து, எழுந்து வந்த இயேசு, கல்வாரியை அடைந்ததும் அவருக்குப் பானம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்வை, மத்தேயு நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

மத்தேயு 27: 33-34

'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.

கசப்பு கலந்த திராட்சை இரசத்தை இயேசு குடிக்க விரும்பவில்லை. காரணம்?... அந்த இரசம் அதிக குடிபோதையைத் தரும்; வழக்கமாய், இந்தப் பானம், உடல் வலி தெரியாமல் இருப்பதற்குக் குடிக்கப்படும். இயேசு அடைந்த வேதனையைப் பார்த்து, உரோமைய வீரர்களுக்கே இரக்கம் பிறந்திருக்க வேண்டும். அவர் வலியைக் குறைக்க, அதுவும், இன்னும் சற்று நேரத்தில் ஆணிகளால் அவரது கைகளையும், கால்களையும் துளைக்கும்போது உண்டாகப் போகும் நரக வேதனையைக் குறைக்க, அந்த வலியை அவர் மறக்க உதவும் எண்ணத்துடன், அந்த இரசத்தைக் கொடுத்தனர், உரோமைய வீரர்கள். இயேசு அதைக் குடிக்க மறுத்தார். தான் ஏற்றுக்கொண்ட துன்பத்தை இறுதி வரை முழுமையாக நிறைவேற்றும் தீர்மானத்துடன் இயேசு அங்கு நின்றார்.

துன்பத்தை உவந்து ஏற்கும் கடவுளைப் பற்றி சிந்திக்கலாம். வேதனையுறும் கடவுள், வலியில் துடிக்கும் கடவுள்... நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு சொற்றொடர், ஓர் எண்ணம். பழைய ஏற்பாட்டில், கடவுளின் துன்புறும் ஊழியனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

எசாயா 53: 4-8

மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்... நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

இறைவாக்கினர் எசாயாவின் இச்சொற்கள் இயேசுவை முன்னறிவிக்கும் சொற்கள் என்று கூறுகிறோம். கடவுளின் ஊழியன் துன்பப்படலாம், கடவுளே துன்பப்படலாமா? படலாம். துன்பத்தை, எதிர்மறையான கண்ணோட்டத்தோடு பார்ப்பதால்தான், கடவுளோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க நமக்குக் கடினமாயிருக்கிறது. ஆனால், துன்பத்தை நேர்மறையானக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், அதன் பயனை உணர்ந்தால், துன்புறும் கடவுளையும் புரிந்து கொள்ள முடியும்.

வலியின்றி குழந்தை பெறுவதற்கு மருத்துவத்தில் பல வழிகள் உள்ளபோதும், வலியோடு குழந்தையைப் பெறுவதையே பல்லாயிரம் தாய்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். ஏன் இந்த முடிவு என்று அவர்களிடம் கேட்டால், தான் படும் துன்பத்திற்கு அர்த்தம் உண்டு என்று சொல்வர்.

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதையாவது வெற்றிகரமாக முடிக்கும்போது, அந்த வெற்றிக்குப் பின்னணியாக இருந்த முயற்சிகள், துன்பங்கள் அர்த்தமுள்ளவை என்பது புரியும். முயற்சி, துன்பம் இவை இல்லாமல் வரும் வெற்றி, இலவசமாகக் கிடைத்த, அல்லது லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகை போல இருக்கும். அதன் உண்மை மதிப்பை உணராமல் போக வாய்ப்புண்டு.

பல நேரங்களில் வாழ்வில் எவ்வளவு துன்பப்பட்டாலும், வெற்றிகள் வராது. துன்பம் ஒன்றையே மீண்டும் மீண்டும் சந்திக்க நேரும். அந்தத் துன்பங்களைப் புரிந்துகொள்ள, துன்புறும் கடவுள் நமக்கு உதவியாக இருப்பார். துன்புறும் கடவுள் ஒருவர் இருப்பதாலேயே நம் துன்பங்களுக்கு நாம் அர்த்தம் தேடிக்கொள்ள முடிகிறது. இல்லையெனில் துன்பத்தில் நொறுங்கி, உருக்குலைந்து, அனைவரும் நம்பிக்கை இழந்து அலைந்து கொண்டிருப்போம்.

வலியை மறக்க கொடுக்கப்பட்ட பழ இரசத்தை மறுத்த இயேசுவின் உறுதி, துன்புறும் பல கோடி மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது என்று பெருமைப்படுகிறோம். அதே நேரம், வலியை மறக்க, மனிதர்கள், குறிப்பாக, வறியோர் மேற்கொள்ளும் பல முயற்சிகளை எண்ணி, கவலையும் பட வேண்டியிருக்கிறது...

மிகக் கடினமான உடல் உழைப்பை தினமும் மேற்கொள்ளும் பலரை, இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். நாள் முழுவதும், உடலை வருத்தி, கசக்கிப் பிழியும் வேலைகளை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான ஏழைகளில் பலர், மாலையில், அன்றையக் கூலி கிடைத்ததும், தங்கள் உடல் வலிகளை மறக்க, தேடிச்செல்வது... சாராயம். சென்னை போன்ற பெரு நகரங்களில் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அந்தப் பணியில் இறங்கும் முன், சாராயம் குடிப்பதையும் பார்த்திருப்பீர்கள். தங்கள் புலன்களை மரத்துப் போகும்படி செய்வதற்கு அவர்கள் சாராயத்தின் துணையைத் தேட வேண்டியுள்ளது.

அவர்கள் பருகும் சாராயத்தின் பின் விளைவாக, அவர்கள் உடல் நலத்தில் ஏற்படும் விபரீதங்கள், குடும்பங்களில் ஏற்படும் வேதனைகள்... என்று பட்டியல் நீண்டுவிடும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்களது சாராயத்தாகம் கண்டனத்திற்குரியதாய் நமக்குத் தோன்றும். கண்டனத்திற்கு பதில், கருணையுள்ள புரிந்து கொள்ளுதலும், அறிவார்ந்த சமுதாயப் பகுப்பாய்வும் நமக்குத் தேவை.

சாராயம் குடிக்கும் மனிதர்களைக் கண்டனம் செய்வது எளிது; ஆனால், சாராயம் குடிக்கும்படி அவர்களைத் தள்ளும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நாம் கேள்விகள் கேட்காமல், கண்டனம் செய்யாமல் இருப்பது தவறு. கண்டனத்திற்குரியவர்கள் இவர்கள் அல்ல. இந்த ஏழைகளின் உடல் வேதனையை மூலதனமாக்கி, சாராயம் காய்ச்சும், அதுவும் தவறான வகையில், கீழ்த்தரமான சாராயம் காய்ச்சும், சாராய மன்னர்கள், மந்திரிகள் கண்டனத்திற்குரியவர்கள். தரக்குறைவான சாராயத்தைக் குடித்து உயிர் இழப்பவர்கள், மற்றும் பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கை, வறிய நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறதே ஒழிய குறைவதாகத் தெரியவில்லை. அதே போல், இந்த ஏழைகளின் குடும்ப வேதனைகளை மூலதனமாக்கி, வட்டிக்குக் கடன் கொடுத்து, ஏழைகளை உயிரோடு விழுங்கும் சுறாமீன்களும் கண்டனத்திற்குரியவர்கள்.

தன் உடல் வலிகளை மறப்பதற்கென அளிக்கப்பட்ட மதுவைக் குடிக்க மறுத்த இயேசு, குடிப்பழக்கத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஏழைகளின் வாழ்விலும் குறுக்கிட்டு தங்கள் உடல் வேதனைகளைச் சமாளிக்கத் தேவையான மன வலிமையையும், வேதனைகளிலிருந்து மீள்வதற்கான நல் வழிகளையும் அவர்களுக்குக்  காட்ட வேண்டும் என செபிப்போம்.

யோவான் 19: 28-29

இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறைய, புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்.

முதல் முறை கொடுக்கப்பட்ட மதுவை மறுத்தார் இயேசு. பின்னர், “தாகமாய் இருக்கிறது” என்று விண்ணப்பித்தார். இறை மகனுக்கு உண்டான தாகம், மனித குலம் அனுபவிக்கும் தாகங்களை, அவற்றை நாம் தீர்த்துக்கொள்ளும் வழிகளைச் சிந்திக்க ஒரு வாய்ப்பாக உள்ளது.

குளிர்ப் பானங்கள் பற்றிய பல தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில், ஒருவர் தரையில் முகம் குப்புறப் படுத்து, ஊர்ந்தபடியே ஒரு குளிர்சாதன பெட்டிக்கு அருகில் செல்வார். மிகவும் சிரமப்பட்டு அந்தக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, தட்டுத்தடுமாறி ஒரு குளிர்பானம் நிறைந்த பாட்டிலை எடுப்பார். குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுவார். திரை இருட்டாகும். அந்த குளிர் பானத்தின் பெயர் (Sprite) திரையில் வரும், அதைத் தொடர்ந்து, Obey your thirst ... அதாவது “உன் தாகத்திற்குக் கீழ்ப்படி” என்ற வார்த்தைகள் வரும். மற்றொரு மதுபான விளம்பரம், (Dos Equis) "STAY THIRSTY my friends" அதாவது, "என் நண்பர்களே, தாகத்தோடு இருங்கள்" என்ற இறுதி வார்த்தைகளுடன் முடிவடையும்.

தாகங்களை வெல்வதற்கு, அப்படி வெல்லமுடியாதச் சூழலில், தாகங்களைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்வதே, வாழக்கைக்குத் தேவையான, பயனுள்ள பாடங்கள். வியாபார உலகம், விளம்பர உலகம் கற்றுத்தரும் பாடங்கள் முற்றிலும் வேறுபட்டவை. “தாகத்திற்கு கீழ்ப்படியுங்கள்” "தாகத்தோடு இருங்கள்" என்று இந்த உலகம் சொல்லித் தருகிறது.

விளம்பர உலகம் சொல்லும் தாகம், உடல் தாகம் அல்ல. மாறாக, நம்மில் தோன்றும் பலவகைத் தாகங்கள்... பொருளுக்கு, பதவிக்கு, செல்வத்திற்கு, பெருமைக்கு, அழகுக்கு, ஆசைகளுக்கு... என்று பல வகைகளிலும் நம்மில் எழும் தாகங்களுக்குக் கீழ்ப்படியச் சொல்கிறது இந்த உலகம். இந்தத் தாகங்களைத் தீர்க்க போட்டிகள் எழலாம். அந்தப் போட்டிகளில் பல கழுத்தறுக்கும் போட்டிகளாக மாறும். அந்தக் கழுத்தறுப்பில் சிந்தும் இரத்தத்தைக் குடித்தும், நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்ற பாடங்கள் இந்த உலகத்தில் சொல்லித் தரப்படுகின்றன.

இப்படிப்பட்ட தாகங்கள் நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றிற்குக் கீழ்ப்படியாமல், எதிர்த்து நிற்க வேண்டிய துணிவை நாம் பெற வேண்டும். அந்தத் துணிவு, இறுதியில், நம்மைச் சிலுவையில் கொண்டுபோய் நிறுத்தினாலும், அந்தச் சிலுவையிலும் நிற்கக் கூடிய துணிவை, கல்வாரியில், சிலுவையில், தாகமாய் இருந்த வீரத் திருமகன் இயேசு நமக்குச் சொல்லித் தரவேண்டும் என்று செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.