2015-03-24 14:54:00

கடுகு சிறுத்தாலும்... பைத்தியமா? முட்டாளா?


மனநலக் காப்பகம் ஒன்றில், சில பொருள்களை இறக்கிவைத்த ஒரு கார் ஓட்டுனர், மீண்டும் புறப்பட்டபோது, ஒரு 'டயர்' முற்றிலும் காற்றிழந்து போயிருந்ததைக் கண்டார். காற்றிழந்த டயரைக் கழற்றிவிட்டு,  காருக்குப் பின்புறம் இருந்த மற்றொரு 'டயரை' மாட்ட அவர் முனைந்தபோது, அவர் கழற்றி வைத்திருந்த திருகாணிகள் அனைத்தும், பக்கத்திலிருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்துவிட்டன. செய்வதறியாது திகைத்து நின்றார், கார் ஓட்டுனர்.

அவ்வேளை, மன நலக் காப்பகத்தில் தங்கியிருந்த ஒரு நோயாளி அப்பக்கமாக வந்தார். கார் ஓட்டுனர் கவலையுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்த அவர், காரணம் கேட்டார். திருகாணிகளை இழந்துவிட்ட கதையை, ஓட்டுனர் அவரிடம் சொன்னார். "ஓ, இவ்வளவுதானா? இதை சரிசெய்யக் கூட உனக்குத் தெரியவில்லையா? அதனால்தான் நீ இன்னும் ஓட்டுனராகவே இருக்கிறாய். நான் சொல்வதைக் கேள்! காரில் உள்ள மற்ற மூன்று ‘டயர்’களிலிருந்து ஒவ்வொரு திருகாணியைக் கழற்றி இந்த டயரில் பொருத்து. பின்னர், காரை, அருகில் உள்ள ‘மெக்கானிக்’ கடைக்கு சிறிது மெதுவாகவே ஓட்டிச் சென்று, மீதி திருகாணிகளைப் பொருத்திக் கொள்!" என்று ஆலோசனை சொன்னார்.

இதைக் கேட்டு வியந்த கார் ஓட்டுனர், அவரிடம், "ஐயா, நீங்கள் உண்மையிலேயே சிறந்த புத்திசாலி... ஆனால், நீங்கள் ஏன் இந்த மனநல காப்பகத்தில் இருக்கிறீர்கள்?" என்று தயங்கி, தயங்கிக் கேட்டார். உடனே, அந்த நோயாளி, "என்னை பைத்தியம் என்று சொல்லித்தான் இங்கே அனுமதித்துள்ளனர். நான் ஒன்றும் முட்டாள் இல்லை!" என்று தெளிவாகப் பதில் சொன்னார்.

பைத்தியமா? முட்டாளா? தீர்மானிப்பது யார்? தீர்மானிப்பது எது?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.