2015-03-23 15:24:00

வாரம் ஓர் அலசல் – ஒரு மனிதர் இரண்டு மரங்கள்


மார்ச்,23,2015. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் Farkhunda என்ற 27 வயது பெண்ணின் சவப்பெட்டியை, அந்நாட்டின் மரபுக்கு மாறாக, பெண்ணுரிமை ஆர்வலர்களே தூக்கிச் சென்று இஞ்ஞாயிறன்று நல்லடக்கம் செய்துள்ளனர். இந்த இளம்பெண் குரானை எரித்தார் என்று தவறாக குற்றம் சுமத்தப்பட்டு, பார்குந்தா மசூதிக்கு அருகே கற்கள் மற்றும் கம்புகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல் அவரது உடலை தீ வைத்தும் எரித்துள்ளது. இந்த விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக புலன் விசாரணை செய்த அதிகாரி ஒருவர், இப்பெண் குரானை எரித்தார் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை என்று கூறியுள்ளார். அன்பு நேயர்களே, இன்றைய சமுதாயத்தில் உண்மையான நிலவரத்தை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் செயல்படும் கும்பல்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் தினமும் பலியாகி வருகின்றனர்! மனிதரின் சுயநல வேட்கைக்குப் பலியாகும் அப்பாவி மனிதரும், பிற உயிரினங்களும், இயற்கையும் எவ்வளவு என்று சொல்லமுடியாது!

மார்ச் 21, கடந்த சனிக்கிழமையில் மட்டுமே, உலக கவிதை தினம், உலக வன தினம், Down Syndrome தினம், உலக இனப்பாகுபாடு ஒழிப்பு தினம், இன்னும் சில உலக தினங்கள் என்று உலகம் கடைப்பிடித்தது. மார்ச் 22 இஞ்ஞாயிறு உலக தண்ணீர் தினம். மார்ச் 23, இத்திங்கள் உலக வானிலை ஆய்வு தினம், மார்ச் 24 இச்செவ்வாய் உலக காச நோய் விழிப்புணர்வு தினம். இப்படி இந்த வாரத்திலும் மேலும் சில உலக தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மனித உரிமைகள், சுற்றுச்சூழல், நலவாழ்வு போன்றவற்றைப் பாதுகாப்பதில் அனைவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டுமென்றே இந்த உலக தினங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இன்று உலகில் வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்புக்களை எதிர்நோக்காத நாடுகளே கிடையாது. அண்மையில் தென் பசிபிக் பகுதியிலுள்ள Vanuatu தீவு, Pam என்ற கடும் புயலால் பெரும் அழிவுகளை எதிர்நோக்கியது. காலநிலை மாற்றம், சீனாவின் மீது ஏற்கனவே கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டதாகவும், வறட்சியும், கன மழையுடன்கூடிய காற்றும் மற்றும் அதிக வெப்பமும் மேலும் ஏற்படும் என்றும் சீன வானிலை ஆய்வு நிர்வாகத் தலைவர் Zheng Guogang அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறியுள்ளார். உலக அளவில் வெளியேற்றப்படும் கார்பன் வாயுவில் ஏறக்குறைய 45 விழுக்காட்டுக்கு அமெரிக்க ஐக்கிய நாடும், சீனாவும் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.   

எனவே சுற்றுச்சூழலை மாசின்றி காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவியலாளர்கள் அதிகத் தீவிரமாகவே செயலில் இறங்கியுள்ளனர். சூரிய ஆற்றலில் இயங்கும் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை இயக்கும் இவர்களின் முயற்சிகள் இன்னமும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. ஆனால் Bertrand Piccard (சுவிஸ் உளவியலாளர் மற்றும் விமானம் தொடர்புடையவர்), André Borschberg (சுவிஸ் தொழிலதிபர்) ஆகிய இரு சுவிட்சர்லாந்து நாட்டு விமான ஓட்டுனர்கள் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானத்தின் மூலம் இந்த உலகை வலம் வந்துகொண்டிருக்கின்றனர். Solar Impulse 2 எனப்படும் இந்த விமானம், 2009ம் ஆண்டு முதலாவதாக ஒரு மீட்டர் உயரத்தில் சோதனை முறையில் பறக்கவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் முயற்சித்த இவ்விருவரும் இந்த 2015ம் ஆண்டில் உலகை வலம்வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம்தான் உலகின் முதலாவது சூரிய ஆற்றலில் இயங்கும் விமானமாகும். 5 மாதங்களில் உலகின் 12 நகரங்களில் மட்டும் தரையிறங்கத் திட்டமிட்டு இம்மாதம் 10ம் தேதி இந்தியாவில் அகமதாபாத் நகரை வந்தடைந்து மீண்டும் பயணத்தை நடத்தி வருகின்றது. மேலும், ஆபத்தான திறன் கொண்ட சூரிய நடவடிக்கைகள் மற்றும் புவிகாந்த புயல்கள் பற்றி மக்களை எச்சரிக்கும் நோக்கத்திற்காக, SpaceX விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம், 34 கோடி டாலர் செலவில், ஆளில்லா பால்கான் 9 ராக்கெட் செயற்கைக்கோளை ஆழமான விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்தப் பூமியைப் பாதுகாக்க பத்து இலட்சம் மைல் வரை பயணம் செய்து ஆழமான விண்வெளியின் பருவநிலையை இது மேற்பார்வையிடும் என்று நாசா ஆய்வு மைய கருத்துரையாளர் George H. Diller கூறியுள்ளார். மேலும், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், 2040ம் ஆண்டில் சனிகோளின் மிகப்பெரிய நிலவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளது. சனிகோளிலுள்ள டைட்டனின் ஹைட்ரோகார்பன் பெருங்கடல்களை ஆராய்வதற்கு இந்த நீர்மூழ்கி கப்பல் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

வானிலை ஆய்வுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், நம்மை வாழவைக்கும் இப்பூமியின் நலவாழ்வுக்கு நம்மால் இயன்ற சிறு சிறு முயற்சிகளில் இப்போதே ஈடுபடலாம். உலகளாவிய பொருளாதாரம் வளர்ந்துவரும்வேளை, தண்ணீர் தாகத்திலும் உலகு அதிகமாக வாட வேண்டியிருக்கும். தற்போதைய சுத்தமான நீர்ப் பயன்பாடு குறைக்கப்பட முயற்சிகள் எடுக்கப்படவில்லையெனில், 2030ம் ஆண்டுக்குள் உலகம் தனக்குத் தேவையான சுத்தமான நீரில் நாற்பது விழுக்காடு பற்றாக்குறையை எதிர்நோக்கும் என்று உலக தண்ணீர்த் தினத்தன்று ஐ.நா. எச்சரித்துள்ளது. தற்போது 720 கோடியாகவுள்ள உலக மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 910 கோடியாக உயரும். அச்சமயம் உலக மக்களில் ஏறக்குறைய 69 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள், தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு, வாழ்வுக்கு மிக முக்கிய ஆதாரமாக இருக்கும் இப்பூமியின் தண்ணீர் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டு அதைப் பயன்படுத்தும் உரிமையிலிருந்து எவரும் ஒதுக்கப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். தண்ணீரைப் பாதுகாத்து பகிரும் நமது திறமையை நமது வருங்காலத் தலைமுறை சார்ந்துள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

மரம், மண்ணிற்கு மருதாணி. மரம் பூமியைப் போர்த்திக்கொள்ளும் மரகதம். இது இயற்கையின் சீதனம், காற்றின் வாகனம், அழகின் ஆசனம், பசுமையின் தோரணம். ஒவ்வொரு மரமும் பயணிகளுக்கு நிழல்குடை, பறவைகளுக்கு வேடந்தாங்கல், மலர்களுக்குப் பிரசவ விடுதி. மரத்தின் கிளைகள் மழையை வருவிப்பவை. அன்புகூர, தானம் வழங்க, சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள மரம் மனிதருக்குக் கற்றுத் தருகிறது. தன்னை கல்லால் அடிக்கிறவருக்கும் கனியைத் தருகிறது, தன்னை வெட்டும் கோடரிக்கும் காம்பு தருகிறது, வெட்டி அடுப்பு எரிப்பவருக்கும் உணவு தருகின்றது. இவ்வாறு மனிதருக்கு ஒவ்வொரு மரமும் ஒரு போதி மரம் என்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு அவர்கள். மரங்கள் மண் அரிப்பையும், நிலச்சரிவையும் தடுக்கின்றன, இலைகள் பூமியில் உதிர்வதால் மண் வளமடைகின்றது. வாழை மரம் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்கிறது. தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம், யாரும் தண்ணீர் ஊற்றாமலே கோடையில் நுங்கு தருகின்றது. தனது அத்தனை உறுப்புக்களையும் தானம் செய்து தானத்தின் மேன்மையை நமக்கு உணர்த்துகின்றது. ஆனால் பனைமரங்கள் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆலமரம் அரசமரம்... இப்படி ஒவ்வொரு மரத்தின் மதிப்பையும் நாம் புகழ்ந்துகொண்டே இருக்கலாம். காசு... பணம்... துட்டு... என்றால் மரம், மரம் என்று பாடிக்கொண்டே போகலாம்.

மரங்கள் சொல்கின்றனவாம் – இந்த மனிதர்கள் நம்மை வைத்து பல சிலுவைகளைச் செய்கிறார்கள், ஆனால் தங்களைக் கொண்டு ஏன் மற்றோர் இயேசுவை செய்யக் கூடாது என்று. மனிதர்கள் இயேசுவைச் செய்யாமல், தங்களிடமிருந்தே ஒரு சிலுவையைச் செய்தாலே போதும் என்று இறையன்பு அவர்கள் சொல்கிறார். அதாவது சிலுவை கற்றுத்தரும் தியாகம், அன்பு, மனிதநேயம், பகைவரை மன்னித்தல் போன்ற நற்பண்புகளில் மனிதர் வளரலாம். ஆனால், மனிதர் தன்னலவாதிகளாக, தங்களுக்குப் பலன்கள் தரும் மரங்களையே வெட்டி வீழ்த்துகிறார்கள். மரங்களால் ஆயுதங்கள் செய்து, அந்த ஆயுதங்களைக் கொண்டே மரங்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும். ஒரு மரம் சுத்தப்படுத்தும் காற்றையும். அப்புறப்படுத்தும் அழுக்கையும், அது உண்டாக்கும் மேகங்களையும், அது தரும் நிழலையும் கணக்கிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை கணக்கிடவே முடியாது. ஆகவே அன்பர்களே, மரம் வளர்ப்பு ஒன்றே நாம் உலகுக்கு ஆற்றும் நன்றியாகும்.

மரம், மண்ணின் வரம்!’ என்றார் கவிஞர் வைரமுத்து. 'மரம், மனிதருக்கு வளம்’ என்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மரப்பயிர் விவசாயி தேவராஜன். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கானூர்புதூர் கிராமத்திலிருக்கும் தனது 10 ஏக்கர் நிலத்தில், பலவிதமான மரங்களை வளர்த்து பலருக்கும் எடுத்துக்காட்டாய் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தயிருக்கும் 'பசுமைத் தாம்பூலம்' திட்டத்தை நாமும் பின்பற்றலாம். குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளின்போது மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கலாம். ஒரு திருமணத்தில் 1000 மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினால், அவற்றுள் 60 விழுக்காடு மரக்கன்றுகள் வளர்ந்து மரமானால்கூட, அது நமது அடுத்த தலைமுறை பிராணவாயுவை சுவாசிப்பதற்கு நாம் இப்போது அச்சாரம் போடுவதாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு மொத்தம் 12 கோடி மரங்கள் தேவைப்படுகின்றனவாம். நாம் இந்த உலகைவிட்டுப் போவதற்குமுன், நாம் பிறந்தபோது எவ்வளவு மரங்கள் இருந்தனவோ, அந்த அளவு மரங்களாவது இந்த உலகில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உலக நலனில் அக்கறைகொண்டு மரம் வளர்த்தல் தற்போதைய தேவையாகவே உள்ளது.

மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய்ச் சலவை செய்வது? மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?  மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏரி? என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கேள்வி கேட்டு சிந்திக்கத் தூண்டுகிறார்.

ஆதலால் கணினி குளத்தில் குழந்தைகள் தேங்கி விடாமல், மரங்களை அன்புகூர அவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம். ஒவ்வொருவரும்  சராசரியாக இரண்டு மரங்களை நட்டு வளர்ப்பதற்கு ஊக்கப்படுத்தி நம் பூமியைப் பசுமையாக்குவோம். இந்நேரத்தில் ஆர்வலர் ஒருவர் பற்றி நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். புதுமையான நீர் சேகரிப்பு முயற்சிகள் மூலம் இந்தியக் கிராமங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்காக, பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் அவர்களுக்கு 2015ம் ஆண்டுக்கான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த "ஸ்டாக்ஹோம் நீர் விருது' வழங்கப்படுகிறது. 56 வயதாகும் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேந்திர சிங் அவர்கள், பல ஆண்டுகளாக வறட்சியை நீக்கி, மக்களை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதனால், அவர் "தண்ணீர் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் பல ராஜேந்திர சிங்குகள் உருவாகட்டும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.