2015-03-23 16:02:00

தென் சுடானில் ஏறத்தாழ 250 சிறார் போராளிகள் விடுதலை


மார்ச்23,2015. கடந்த சனவரி மாதம் தென் சுடானில் துவங்கப்பட்ட சிறார் போராளிகளின் விடுவிப்பு நடவடிக்கையின் மூன்றாவது கட்டமாக தற்போது 250 சிறார் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜோங்லி மாநிலத்தைச் சேர்ந்த கோப்ரா கிளர்ச்சிக் குழுவுக்கும் அரசுக்கும் இடையில், கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக இது இட‌ம்பெற்ற‌தாக‌, இந்நடவடிக்கைகளுக்கு உதவி வரும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள‌ மேலும் 400 சிறுவர்கள் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படுவர் என்றும், இதுவரையில் நடந்த விடுவிப்புக்களில் மிகப்பெரிய விடுவிப்பாக அது இருக்கும் என்றும் யுனிசெப், மேலும் தெரிவித்தது.

த‌ற்போது விடுவிக்க‌ப்ப‌ட்ட‌ சிறார்க‌ளுள் 9 வ‌ய‌துடைய‌ ஒரு சிறுவ‌னும் உள்ள‌தாக‌ செய்தி நிறுவ‌ன‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. இவ்வாண்டில் இதுவரை 1300 சிறார் படைவீரர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.