2015-03-23 15:42:00

திருத்தந்தை:மண்ணில் புதைக்கப்படும் விதையாகி கனி தாருங்கள்


மார்ச்23,2015. இறைவன் மற்றும் அயலார்மீது கொண்ட அன்பிற்காக இயேசுவைப்போல் தங்கள் வாழ்வையே இழக்கத் தயாராக இருக்கும் கிறிஸ்தவர்கள், மண்ணில் புதையும் விதையாகி மிகுந்த கனிதருபவர்களாக மாறலாம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவிழாவுக்கு வந்திருந்த கிரேக்கர்கள், கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்புவை அணுகி, இயேசுவைக் காண விரும்புவதாகக் கூறிய இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, மண்ணில் மடியும் கோதுமை மணி பற்றிய இயேசுவின் கூற்றுக்கு விளக்கமளித்தார்.

மனுமகன் உயர்த்தப்படவேண்டும் என இயேசு கூறியது, சிலுவையில் உயர்த்தப்படுவதையும், உயிர்த்தெழுதலின்போது தந்தையால் உயர்த்தப்படுவதையும் குறிக்கின்றது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் இறப்பு, புதிய வாழ்வின் ஆதாரமாக இருந்து, இறை அன்பின் வல்லமையை மீண்டும் மீண்டும் உருவாக்குவதாக உள்ளது எனவும் கூறினார்.

இயேசுவைப் பற்றி அறிந்துள்ள வேளையில், இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு நாம் வழங்கவல்லவை, நற்செய்தி, சிலுவை மற்றும் நம் சாட்சிய வாழ்வு எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையைக் கேட்க கூடியிருந்த மக்கள், பேதுரு வளாகத்தில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட கையடக்க நற்செய்திப் பிரதிகளை பெற்றுச் செல்லுமாறும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.