2015-03-23 15:36:00

உன்னை நானும் தீர்ப்பிடேன்-திருத்தந்தைக்குப் பிடித்த சொற்கள்


மார்ச்,23,2015. இரக்கம் இல்லாத இடத்தில் நீதியும் இருக்க முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை தன் மறையுரையை வழங்கினார்.

விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, இயேசுவின் முன் பரிசேயர்கள் கொணர்ந்த நிகழ்வை எடுத்துரைக்கும் இத்திங்கள் நற்செய்தியையொட்டி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்ணின் மீது குற்றம் சுமத்தியவர்கள் புனிதர்கள் அல்ல, அவர்களும் பாவிகள், மற்றும், வெளிவேடக்காரர்கள் என்று கூறினார்.

இத்தகைய இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், சமுதாயத்திலும், திருஅவையிலும் உள்ளனர்; மனது களங்கப்பட்டிருக்கும்போது, இரக்கத்தைப் புரிந்துகொள்ளும் நிலை பறிக்கப்படுகிறது என்று மேலும் கூறினார் திருத்தந்தை.

விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை நோக்கி இயேசு கூறிய "உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா? நானும் தீர்ப்பிடேன்" என்ற வார்த்தைகள், தனக்கு விவிலியத்தில் பிடித்த முக்கியமான உரையாடல்களில் ஒன்று என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை, இரக்கத்தால் நிறைந்து வழியும் வார்த்தைகள் என்பதாலேயே தனக்கு மிகவும் பிடித்த வரிகள் என்று கூறினார்.

மேலும், "எண்ணற்ற வேறுபாடுகள் மத்தியிலும், ஒவ்வொரு திருஅவையும், கிறிஸ்தவ சமூகமும் இரக்கத்தின் உறைவிடமாக விளங்குவதாக" என்ற வார்த்தைகளை, இத்திங்களன்று தன் Twitter செய்தியாக எழுதியுள்ளார், திருத்தந்தை.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.