2015-03-23 15:53:00

இரு கத்தோலிக்க அருள்பணியாளர்களை கைது செய்துள்ளது சீனக் காவல்துறை


மார்ச்23,2015. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் சீனக் கத்தோலிக்கத் திருஅவையில் பணியாற்றிவந்த இரு அருள்பணியாளர்களை கைது செய்துள்ளது, அந்நாட்டு காவல்துறை.

சீனாவில் மறைந்து வாழும் கத்தோலிக்கர்களுக்கு, திருப்பலி நிறைவேற்றி முடித்தவுடன் Mutanjiang என்ற நகரில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் Shaoyun Quan, Jianyou Cao என்ற இருவரும் எங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற எவ்விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கத்தோலிக்கத் திருஅவையில் இணைய மறுத்து,  மறைந்து வாழும் திருஅவையாக சீனாவில் செயல்பட்டுவரும் மக்களிடையே, ஆன்மீகப் பணியாற்றியதற்காக இவ்விரு அருள்பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் திருவையை, சீன அரசு அங்கீகரிக்க மறுத்து வருவதால், அது மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Mutanjiang நகரில் மறைந்து வாழும் கத்தோலிக்கருக்கு, பங்கு குருவாக Quan என்பவரும், உதவிப்பங்கு குருவாக Cao என்பவரும் கடந்த சில மாதங்களாக சேவையாற்றத் தொடங்கியதையொட்டி தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அனுமதியின்றியும், அரசின் அனுமதி பெறாத இடத்திலும் வழிபாடு நடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவில், அர‌சு அனும‌தியுட‌ன்  அர‌சின் கீழ் இய‌ங்கும் க‌த்தோலிக்க‌ ச‌பையென்றும், திருத்தந்தையின் த‌லைமையை ஏற்ப‌தால் ம‌றைந்து வாழ‌வேண்டிய‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ திருஅவை என்றும் இரு க‌த்தோலிக்க‌ ச‌பைக‌ள் உள்ள‌ன‌.

ஆதாரம் : ASIANEWS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.