2015-03-21 15:34:00

திருத்தந்தை - தொழிலாளிகளைச் சுரண்டுவது கிறிஸ்தவப் பண்பு அல்ல


மார்ச்,21,2015. நேப்பிள்ஸ் நகருக்கு அருகிலுள்ள Scampiaவின் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் வளாகத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நேப்பிள்ஸில் மனித வாழ்வு ஒருபோதும் எளிதானதாக இருந்ததில்லை, அதேநேரம் அது துன்பமாகவும் ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறினார்.

தீமையால் ஒருபோதும் ஆட்கொண்டுவிடாமல் நம்பிக்கையுடன் வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இச்சந்திப்பில் ஒரு பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர், நேப்பிள்ஸ் வழக்கறிஞர்கள் சார்பில் நேப்பிள்ஸ் நீதிமன்றத் தலைவர் Antonio Bonajuto அவர்கள் உட்பட மூவர் திருத்தந்தையிடம் தங்களின் விண்ணப்பங்களை முன்வைத்தனர்.

சமுதாயத்தில் நிலவும் ஊழல், இளம் குற்றவாளிகளையும், மரணத்தையும் சோர்வையும் ஏற்படுத்துகின்றது, சட்டத்தையும் நீதியையும் காக்கவேண்டிய தங்களுக்கு திருத்தந்தை வழிகாட்ட வேண்டுமென வழக்கறிஞர் Bonajuto கேட்டுக்கொண்டார்.

இம்மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, குடியேற்றதாரர் இரண்டாம்தர குடிமக்கள் அல்ல என்றும் கூறி, வாழ்வுப் பயணத்தில் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் ஆறுதலாகத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பின்மை மனித மாண்பை பறிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, தொழிலாளிகள் சுரண்டுபடுவதைக் கண்டித்த அதேவேளை, இவ்வாறு சுரண்டுவது கிறிஸ்தவப் பண்பு அல்ல என்றும் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.