2015-03-21 16:04:00

தமிழ் அறிவியலாளர் வெங்கட்ராமன் ராயல் கழகத்தின் தலைவர்


மார்ச்,21,2015. பிரிட்டனின் புகழ்பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த அறிவியலாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ் நாட்டின் சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் ஒஹையா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் 2009ம் ஆண்டில் நொபெல் வேதியல் விருதை கூட்டாக வென்றார். உடலின் செல்களில் புரதச்சத்தை உற்பத்தி செய்யும் ரிபோசோம்களைப் பற்றி செய்த ஆய்வுகளுக்காக அவர் இந்த விருதை வென்றார்.

தற்போது அவர் இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவி பிரித்தானிய அறிவியல் உலகில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாகும். ராயல் சொசைட்டி 1660ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அதன் தலைவராக இருப்பவர் பிரிட்டனில் அறிவியலுக்காக உழைக்கும் முக்கியமான பிரமுகராக இருப்பார். ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த புகழ் பெற்ற அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் இந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர்களில் ஒருவர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.