2015-03-21 15:18:00

இறையன்பிலிருந்து சிறையின் கம்பிகள்கூட நம்மைப் பிரிக்காது


மார்ச்,21,2015. இறையன்பிலிருந்து நம்மை எதுவும், சிறையின் கம்பிகள்கூட நம்மைப் பிரிக்க முடியாது, ஆனால், பாவம் மட்டுமே நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணத்தை இச்சனிக்கிழமையன்று மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Giuseppe Salvia என்ற சிறையில் கைதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

பல கைதிகளுடன் மதிய உணவை அருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் நம் பாவத்தை ஏற்று, உண்மையாகவே மனம் வருந்தி அதை அறிவித்தால் பாவம் கடவுளைச் சந்திக்கும் இடமாக மாறும் என்றும் கூறினார்.

உலகின் சிறைகளில் கைதிகள் பல நேரங்களில் மனிதமற்ற நிலைகளில் வைக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, தண்டனை காலம் முடிந்து மீண்டும் அவர்கள் சமூகத்தோடு ஒன்றிணைவதற்கு உதவி செய்யும் தலைவர்கள், மற்றும் மேய்ப்புப்பணியாளர்கள் தங்களின் இப்பணியை தொடர்ந்து ஆற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

அன்பு, மனிதரை எப்போதும் மாற்றும் சக்தி கொண்டது, மனிதர் ஓரங்கட்டப்படும் இடங்கள், சிறைகள் போன்றவை முழு மனித சமுதாயத்துக்கும் தூண்டுதல் தருவதாய் அமையக்கூடும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் இறைப்பிரசன்னத்தில் வாழுமாறும், நமது எதிர்காலம் கடவுளின் கரங்களில் உள்ளது, பல கடும் பிரச்சனைகள் மத்தியில் இறைவனின் அளவற்ற கருணையில் நம்பிக்கை வைத்து வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.